தமிழகத் தேர்தல் திருவிழா விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. மே -2 வாக்கு எண்ணிக்கை. இந்த தேர்தலில் மகுடம் சூடப்போவது யார் என்பதை காண மக்கள் ஆவலுடன் உள்ளனர். அ.தி.மு.க கூட்டணி, தி.மு.க கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அ.ம.மு.க- தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டியாக பார்க்கப்பட்டாலும். இதில் அ.தி.மு.க - தி.மு.க இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. சிம்மக் குரலில் ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என முழங்கிய மு.கருணாநிதி, கம்பீரமான குரலில் ‘மக்களால் நான் மக்களுக்காக நான் என மேடை தோறும் முழங்கிய’ ஜெயலலிதா ஆகிய இருபெரும் ஆளுமைகள் இல்லாத தேர்தல் களம் இது. இரு திராவிட கட்சிகளுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
234 தொகுதிகளிலும் கலைஞரே போட்டியிடுகிறார் என நினைத்து வாக்களியுங்கள் என பிரச்சாரத்தை முன்வைத்த தி.மு.க. அம்மாவின் ஆசிப் பெற்ற வெற்றி வேட்பாளர்கள் என முழங்கிய அ.தி.மு.க. மாற்றத்தை முன்வைத்த மக்கள் நீதி மய்யம் கூட்டணி, தீய சக்திகளை வேர் அறுப்போம் என முழங்கிய அ.ம.ம.க - தே.மு.தி.க கூட்டணி, அடிப்படை அமைப்பு அரசியல் முறையை மாற்றுவதே உண்மையான மாற்றம் என மேடைதோறும் முழங்கும் நாம் தமிழர் கட்சி. தமிழகத்தில் அதிமுக ஹாட்ரிக் வெற்றி அடிக்குமா?.. மீண்டும் கோட்டையில் கொடியேற்றுமா தி.மு.க? மய்யத்தாருக்கு அமைச்சரவை கிடைக்குமா?.. நாம் தமிழர் கட்சியின் அரசியல் மாற்றம் வருமா.. அ.ம.மு.க - தே.மு.தி.கவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது மக்களின் கைகளில் தான் உள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு தி.மு.கவுக்கு பலம் சேர்ப்பதாக இருந்தது. பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் தி.மு.கவுக்காக இந்த தேர்தலில் கடுமையாக வேலை செய்தது. உடன்பிறப்புகள் இன்னும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே காவல் காத்துக்கொண்டிருக்கிறார்கள். கண்டெய்னர் வண்டிகளை கண்டாலே கலங்குகிறார்கள். தி.மு.கவில் அமைச்சரவைக்கான பட்டியலே தயார் செய்துவிட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் கசிந்தது. அ.தி.மு.க ஹாட்ரிக் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் கூறுகின்றனர் அக்கட்சி நிர்வாகிகள். அம்மாவின் ஆசியோடு மூன்றாவது முறையாக ஆட்சி அமையும் என்கிறார்கள்.
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முன்நிற்கும் சவால்கள் என்ன..
கருணாநிதி இல்லாமல் தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்தால் மு.க.ஸ்டாலின் தன்னை ஒரு தலைவராக நிரூபித்துவிட்டார் என்று அர்த்தம். எதிரணியினர் அவர் மீது வைத்த விமர்சனங்களுக்கு இந்த வெற்றியே பதிலாக அமைந்துவிடும். தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை தி.மு.க எடுத்து வருகிறது. நீட் தேர்வு, உதய் மின் திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக தி.மு.க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றப்படும் எனக் கூறியது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்ய மாநில அரசால் முடியுமா. நீட் தேர்வு இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. பதவியில் இல்லாத போது என்னவேண்டுமானாலும் பேசலாம் ஆட்சி பொறுப்புக்கு வந்துவிட்டால். மக்கள் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றியாக வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
அதேபோல் பா.ஜ.க-வுடன் சுமூக உறவில் இருக்கும் அ.தி.மு.க-வே மத்திய அரசிடம் இருந்து போதிய நிதிஆதாரங்கள் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை என பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தது. கொள்கையளவில் பா.ஜ.கவுடன் முரண்டுபிடிக்கும் தி.மு.க-வுக்கு நிதிஆதாரங்கள் விவகாரத்தில் சிக்கலைத்தானே ஏற்படுத்தும்.
கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த அரிசி அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது எப்படி சாத்தியமாகும். இதற்கான நிதி ஆதாரங்கள் எங்கிருந்து கிடைக்கும். தமிழகத்தில் இப்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. ரெம்டெசிவீர் மருந்துக்காக மக்கள் மருத்துவமனைகளில் காத்து நிற்கின்றனர். இந்த கொரோனா பரவல் தி.மு.கவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மே-2 க்கு பிறகு தமிழகத்தில் ஊரடங்கு இருக்காது என மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார். இதெல்லாம் சாத்தியம் தானா. இல்லை கொரோனாவுக்கு எதிராக தி.மு.க எதாவது சிறப்பு ஏற்பாடுகளை வைத்துள்ளதா? கொரோனா காலங்களில் மாதம் 1,000 வழங்குவது சாத்தியமா. ஏழை மக்கள் பசி போக்க 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும் என்றனர். தமிழத்தில் ஏற்கெனவே உள்ள அம்மா உணவகங்களை என்ன செய்வார்கள். பெயர் பலகை மட்டுமே மாற்றப்படுமா?
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்..
அ.தி.மு.க ஹாட்ரிக் வெற்றிப்பெற்றால் தமிழகத்தில் தொடர்ந்து இதேநிலைத்தான் நீடிக்கும். மத்திய அரசுக்கு இணக்கமாக செல்ல வேண்டிய சூழல்தான் ஏற்படும். கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு மவுஸ்-கூடும். ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.கவின் பலத்துடன் கட்சிக்குள் வலம் வருவார். துணை முதல்வர் பதவி கிடைக்கலாம். பாஜகவும் அமைச்சரவையில் இடம்பெறும். அதிமுகவுக்கு அமைச்சரவையை அமைப்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கும். உட்கட்சி விவகாரங்களையும் சமாளிக்க வேண்டும். பா.ஜ.கவையும் அனுசரித்து செல்ல வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தை எப்படி எதிர்கொள்வார்கள்.
மக்களின் தீர்ப்பை அறிய மே 2ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்
தேர்தல் முடிவுகளை News18Tamil.com ல் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். இணைந்திருங்கள் ...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, AIADMK Alliance, DMK, DMK Alliance, Tamilnadu, TN Assembly Election 2021