முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை

தலைமை செயலகம்

தலைமை செயலகம்

Tamil Nadu Assembly : தமிழக சட்டப்பேரவை இன்று கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். ஆளுநர் உரையில் பல முக்கிய விஷயங்கள் இடம்பெற உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Last Updated :

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழக சட்டசபை கூடும்போது ஆளுநர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருந்து வரும் சூழ்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், மீண்டும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கத்தில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால், சட்டசபை கூட்டத்தை கலைவாணர் அரங்கத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் விரைவாக செய்யப்பட்டன. அங்கே, சபாநாயகர் அப்பாவு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.

இந்நிலையில், கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல்கூட்டம் என்பதால், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். இதற்காக, காலை 9.55 மணிக்கு கலைவாணர் அரங்கத்திற்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்று அரங்கத்திற்கு அழைத்து வரவுள்ளனர்.

அதன் பின்னர், சபாநாயகர் இருக்கையில் ஆளுநர் அமருவார். அவருக்கு வலதுபுறம் உள்ள இருக்கையில் சபாநாயகர் அப்பாவுவும், இடதுபுறம் உள்ள இருக்கையில் ஆளுநரின் செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டிலும் அமரவுள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை சுமார் 1½ மணி நேரம் நிகழ்த்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர், அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார்.

அதன்பின்னர், இன்றைய கூட்டம் நிறைவடையும். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இந்நிலையில், நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடராக இருப்பதால், ஆளுநர் உரையில் பல முக்கிய விஷயங்கள் இடம்பெற உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற நிறைவேற்றப்படாத அறிவிப்புகள் தொடர்பாக ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது.

Read More : ஜல்லிக்கட்டு போட்டியை எப்படி நடத்துவது? அமைச்சர் ஆலோசனை

அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்கும் வகையில் ஒருங்கிணைந்த புதிய சட்ட மசோதா, தை 1ம் தேதியை தமிழ் புத்தாண்டாக பிரகடனப்படுத்தும் அறிவிப்பு உள்ளிட்டவை ஆளுநர் உரையில் இருக்கலாம் என கூறப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Read More : கொரோனா அலெர்ட்.. ஒரே நாளில் 1003 பேருக்கு பாசிட்டிவ்.. 50% பேர் சென்னைவாசிகள்..

எதிர்க்கட்சிகள் தரப்பில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் உள்ளிட்ட விவகாரங்களை கிளப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி திமுகவின் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளான குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை, பொங்கல் ரொக்கப் பரிசு உள்ளிட்டவற்றை பற்றி குரல் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Must Read : விமான நிலையத்தில் கள்ள துப்பாக்கியுடன் பிடிபட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது

இதனிடையே ஜனவரி 8ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: RN Ravi, Tamil Nadu Governor, TN Assembly