சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது. இடைக்கால பட்ஜெட்டை போலவே இதுவும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும், பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி திட்டங்களுக்கு ரூ.4,131 கோடி ஒதுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களும் இடம்பெற்றன.
இதனிடையே, சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
முன்னதாக, வேளாண் பட்ஜெட் குறித்து மாநில அளவிலான விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துகளையும் பெற்றுள்ளார். அதேபோல், வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பாக 250க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் நேரடியாக கருத்து கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு பட்ஜெட்டில் விடை கிடைக்கும் என்றும் இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி அளித்திருந்தார்.
அதன்படி, வேளாண் பட்ஜெட்டில் பல புதிய சலுகைகளும், அறிவிப்புகளும் வரும் என்ற நம்பிக்கையுடன் தமிழக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
வேளாண் பட்ஜெட் 2022 - 23 முக்கியம்சங்கள்
- தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
- கடந்த நிதிநிலை அறிக்கையை செயல்படுத்த 6 மாதங்கள் மட்டுமே அவகாசம் இருந்தது. கடந்த பட்ஜெட்டில் அறிவித்த 86 அறிவிப்புகளில் 80-க்கு அரசாணை வெளியிடப்பட்டது.
- வேளாண்மையை உச்சத்திற்கு கொண்டு செல்ல இந்த நிதிநிலை அறிக்கையின் திட்டங்கள் உதவும்.
- தமிழ்நாட்டில் விவசாயிககுக்கு மானிய விலையில் உரங்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படுகின்றன.
- 59 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டில் 53.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
- புவி வெப்பம் அதிகரிப்பால், உணவக மேலாண்மை பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப சாகுபடி முறையை மாற்ற அரசு நடவடிக்கை.
- விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தலைமைச்செயலர் தலைமையில் குழு அமைத்து பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படுகின்றன.
- தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு அதிகரித்து உள்ளது.
- கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு தோட்டக்கலை செடிகள் வழங்கப்படுகிறது.
- பருவ மழையால் பாதிக்கப்பட்ட 3.35லட்சம் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
- முதலமைச்சர் நில மேம்பாடு இயக்கத்தில் ரூ.132 கோடி மதிப்பில் மானாவரி நிலத்தொகுப்பு
- 2020-21ல் ரூ.2,055 கோடி விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
- மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு இந்த ஆண்டு 71 கோடி ஒதுக்கீடு.
- இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- இயற்கை வேளாணையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு
- கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்க ரூ.300கோடி ஒதுக்கீடு
- தென்னை விவசாயத்திற்கு ரூ.9 கோடி ஒதுக்கீடு
- 20ஆயிரம் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் மானிய விலையில் வழங்கப்படும்.
- 60ஆயிரம் விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும்.
- வேளான் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ. 1லட்சம் கடனுதவி வழங்கப்படும்.
- நெல் அறுவடைக்கு பின் பயிர் சாகுபடி செய்ய ரூ.5 கோடி ஒதுக்கீடு
- ரூ.12 கோடி மதிப்பீட்டில் செம்மரம், சந்தனம் போன்ற மதிப்புமிக்க மரங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்
- 2022-2023 விதை மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 30 ஆயிரம் மெட்ரிக் டன் விதை வழங்கப்படும்.
- சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க 500 குறு விவசாயிகளுக்கு ரூ.1 கோடி நிதி.
- நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்திற்கு ரூ.75லட்சம் ஒதுக்கீடு.
- அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கரில் உற்பத்தி செய்யப்பட்ட 20 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கப்படும்.
- பருத்தி உற்பத்தியை உயர்த்திட ரூ.15 கோடி ஒதுக்கீடு
- இயற்கை முறை பருத்தி சாகுபடி ஊக்குவிக்கப்படும்.
- பயிர்காப்பீடு திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2,339 கோடி ஒதுக்கீடு.
- இயற்கை உரங்களை தயாரிக்கும் ஒவ்வொரு குழுவிற்கும் ரூ.1 லட்சம் நிதி
- கருஷ்ணகிரி, சேலம், தருமபுரியில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம்
- மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும்
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 300 கோடி நிதி ஒதுக்கீடு.
- வேளாண் பொருட்களின் விதை முதல் விற்பனை வரை அறிந்துகொள்ளும் செயலி உருவாக்கப்படும்.
- உரம் பயன்பாடு பூச்சிக்கொல்லி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க 7 உழவர் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்
- தமிழ் மண் வளம் என்ற இணைய தளம் உருவாக்கப்படும் - வேளாண்மைத்துறை அமைச்சர்
- 75 லட்சம் மதிப்பீட்டில் மயிலாடுதுறையில் புதிய மண் பரிசோதனை கூடம் அமைக்கப்படும்.
- சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க ₹28.50 கோடி ஒதுக்கீடு
- தூத்துக்குடி, விருதுநகர் தென்காசி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு பயிரிடலை அதிகரிக்க ₹28.50 கோடி ஒதுக்கீடு.
- ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023ம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது
- கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை - 2021-22 சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பும் விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு -ரூ.195 ஊக்கத் தொகை
- 9.26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடாக ரூ.2,055 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- தஞ்சை,சேலம்,திருவள்ளூர் நெல்லை ஆகிய மாவட்டங்களில் சோயா பீன்ஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை.
- துல்லிய பண்ணை திட்டத்தில் ரூ.5 கோடி மானிய விலையில் விதைகள், இடுபொருள்
- வேளாண்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
- பூண்டு சாகுபடி வாய்ப்புள்ள பகுதிகளுக்கு விரிவுப்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு
- மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ரூ.381 கோடி ஒதுக்கீடு.
- ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த ரூ.65 கோடி ஒதுக்கீடு.
- பனை மதிப்புக்கூட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்.
- 10 லட்சம் பனை விதைகள் விநியோகிக்கப்படும்.
- மதிப்புக்கூட்டு பொருள் தயாரிக்கும் கருவிகள் வாங்க 75 சதவீதம் மானியம்
- தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு 38,000 ஏக்கர் பரப்பளவில் ₹27.51 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும்
- தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க 37 தேனீ தொகுப்புகள் ₹8.51 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் - வேளாண் பட்ஜெட்
- 50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ₹15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
- சென்னை, திருச்சியில் நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
- வேளாண்துறைக்கு மொத்தமாக ரூ.33007.68 கோடி ஒதுக்கீடு
- சூரிய சக்தியால் இயங்கும் 3000 பம்பு செட்கள் 70% மானியத்தில் வழங்கப்படும்.
- அரசு மாணவ மாணவியர் விடுதிகளில் காய்கறி, பழங்கள், மூலிகை செடிகள் கொண்ட தோட்டம் தொடங்கப்படும்.
- விடுதி ஒன்றுக்கு 10 ஆயிரம் வீதம் 20 லட்ச ரூபாயில் திட்டம் தொடக்கம்.
- நகர்புற மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் 500 பயனாளிகளுக்கு செங்குத்து தோட்டக்கலை 75 லட்ச ரூபாயில் வழங்கப்படும்.
- உழவர் சந்தைகள் காலையில் மட்டுமே செயல்படுகின்றன. சிறுதானியங்கள் விற்பனை செய்ய மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை மாலையிலும் செயல்பட அனுமதி
- அயிரை, செல்கெண்டை, கல்பாசி போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு
- வெல்லம் தயாரிப்பை ஊக்கப்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு
- காவிரி டெல்டாவில் 4,964 கி.மீ கால்வாய்களை தூர்வார ரூ.80 கோடி ஒதுக்கீடு
- ட்ரோன் மூலம் இடுபொருள் தெளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 60 ட்ரோன்கள் வாங்க பயிற்சி அளிக்க ரூ.10.32 கோடி ஒதுக்கீடு
- முதல்வர் சூரியசக்தி பம்ப்செட் திட்டத்தில் 3,000 பம்ப் செட்டுகள் வாங்க ரூ.65.3 கோடி ஒதுக்கீடு
- கடந்த ஆண்டில் 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது சாதனையாகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.