சட்டப்பேரவையில் பொதுத்துறை மானியம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் முதன்மைத் திட்டங்களை ஆய்வுசெய்யவும், கண்காணிக்கவும் உயர்நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களைத் தொடர்ந்து, துறையின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணி இடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமிப்பதற்காக அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாட தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படும் என்று தெரிவித்தார்.
அரசுப் பணியிடங்களில், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கொரோனா பரவல் காரணமாக, பணியாளர் தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் தாமதமானதால், நேரடி நியமன வயது உச்சவரம்பு இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மாநில அரசு பணியில் உள்ள அனைத்து துறை பணியாளர்களுக்கும் அண்ணா மேலாண்மை நிலையத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
Also read: தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளை பார்த்து வியந்த மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர்!
இந்நிலையில், கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் அதற்கான நிதிஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய முழுமையான அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், 10 ஆண்டு ஆட்சியில் ஆயிரத்து 704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும், அதில், ஆயிரத்து 167 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
537 திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் கைவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
143 திட்டங்களுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், 398 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை என்றும் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
2013-14-ம் ஆண்டில் 56 ஆயிரத்து 346 கோடி ரூபாய் மதிப்பிலான 292 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும், இது விருப்ப செலவினத்தைவிட 135 சதவீதம் அதிகம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செய்ய முடியாத மற்றும் சாத்தியமில்லாத பல திட்டங்களை அறிவித்துவிட்டு, அதனை ஆய்வுசெய்யும்போது, சாத்தியக்கூறுகள் இல்லை என பல திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.