ராஜராஜ சோழன் குறித்த விவாதம் - பொ.வேல்சாமிக்கு மணியரசன் மறுப்பு அறிக்கை

ராஜராஜ சோழன் குறித்த விவாதம் - பொ.வேல்சாமிக்கு மணியரசன் மறுப்பு அறிக்கை
பெ மணியரசு | பொ வேல்சாமி
  • News18
  • Last Updated: July 7, 2019, 1:59 PM IST
  • Share this:
ராஜராஜ சோழன் தொடர்பாக ஆய்வாளர் பொ.வேல்சாமியின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்து தமிழ்தேசியப் பேரியக்கத்தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராஜராஜ சோழன் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்த கருத்தை அடுத்து, நியூஸ் 18 தொலைக்காட்சியின் முதல் கேள்வி நிகழ்ச்சியில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் பல வாதங்களை முன்வைத்தார்.

அதாவது, தமிழ்நாட்டில் வேத வேள்விகளை கொண்டு வந்து பிராமணர்களுக்கு நிலங்களைக் கொடுத்தது “களப்பிரர்கள்“ என்று கூறினார். மேலும், சோழர்கள் காலத்தில் “குலுக்குச் சீட்டு” முறையில் தேர்தல் நடந்ததாகும் அவர் குறிப்பிட்டார்.


இந்நிலையில், பெ.மணியரசனின் கூற்றுகளை முற்றிலுமாக மறுத்துள்ள தமிழக வரலாற்று ஆய்வாளர் பொ.வேல்சாமி, ஆதாரங்களுடன் அது தொடர்பான விளக்கத்தை அளித்திருந்தார்.

படிக்க கிளிக் செய்க... ராஜராஜ சோழன்: 'பெ.மணியரசனின் பொய்யும், புளுகும்' - வரலாற்று ஆய்வாளர் பொ.வேல்சாமி பதில்
இந்நிலையில், பொ. வேல்சாமியின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.


மார்க்சியம் சமூக அறிவியல் வழிப்பட்ட இயங்கியல் (Dialectics) கோட்பாட்டைக்கொண்டுள்ளதால் - இப்போதைய மார்க்சியர்கள் சிலரிடம் மாற்றங்கள்ஏற்பட்டு வருகின்றன. ஆனால், மார்க்சியக் கட்சிகளின் தலைமைகள், மாறாநிலைவாதத்தில் உறைந்து கிடக்கின்றன; காரல் மார்க்சே கண்டித்த “வர்க்கச் சுருக்க”  வாதத்தில் (Class reductionism) சுருங்கிக்  கிடக்கின்றன.  வேத காலத்திலிருந்து தொடங்கும் “ஆரியபாரதப் பெருமிதத்திற்குள்” அடங்கிக் கிடக்கின்றன.

பெரியாரியல் சிந்தனை, சமூக அறிவியல் ஆய்வு அடிப்படைகளைக் கொள்ளாமல் “பகுத்தறிவு எதிர்வினைகளை” (Rational Reactions) அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதில்
மாற்றத்திற்கோ, வளர்ச்சிக்கோ உள்ளாற்றல் (Potentiality) இல்லை.

இந்தப் பின்னணியில் தான் மார்க்சியம், பெரியாரியல் முகாம்களைச் சேர்ந்தோர்.  தமிழர்களின் வரலாற்றுப் பெருமிதங்களையும், தமிழ் மொழியின் தனிச் சிறப்புகளையும் மறுக்கின்றனர்; எதிர்க்கின்றனர்.

மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பினால் துப்புகின்றவர் மார்பில்தான் அது விழும் என்ற எச்சரிக்கைகூட இல்லாமல் இடதுசாரி மற்றும் பெரியாரியல் தமிழர்கள், பேரரசன் இராசராசனை உண்மைக்குப் புறம்பாகக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

கி.மு.வில் சங்க காலத்திலேயே பிராமணர்கள் தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்டார்கள். தமிழ் மன்னர்கள் ஆண்ட சங்க காலத்தில் பிராமணர்கள் ஆதிக்கச் சமூகமாக இல்லை. அரசைப்  பிராமணர்கள் வழி நடத்தவில்லை. அறவோராக, தூதுவராக, புலவராகப் பிராமணர்கள் தமிழ் மன்னர்களுக்குக் கீழ்ப்பட்டு  வாழ்ந்துள்ளார்கள். தமிழ்மன்னர்களிடம் கொடைகள்  பெற்றுள்ளார்கள். ஆனால் பிராமணர்களின் வர்ணாசிரமம் கோலோச்சவில்லை; செயல்படவில்லை!

“வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால்ஒருவனும் அவன் கண்படுமே” என்ற பாண்டியன் ஆரியப்படை கடந்தநெடுஞ்செழியன் பாடலே இதற்குச் சான்று!

தமிழர்களின் நால்வகைப் பிரிவு “பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர” அல்ல; அரசர், அந்தணர், வணிகர், வேளாளர். இந்த நால்வகை வரிசையில் கடைசியாக உள்ளபிரிவில்
கற்றவரிடம் முதல் வரிசையில் உள்ளவர்களும் பணிவுடன் கருத்துக்கேட்பர் என்று பாண்டிய அரசர் கூறுகிறார்.

கலித்தொகையில் வரும் தலைவி, “நம் ஊரைவிட்டுத்  துரத்தினாலும் போகாமல் சுற்றிவரும் பார்ப்பான்” என்று  ஒரு முதிய பிராமணனைக் கேலி செய்யும் பாடல் அக்காலத்தில்  பிராமணர்களின் நிலையைத் தெரிவிக்க சிறந்த சான்றாகக்கொள்ளலாம் (குறிஞ்சிக்கலி - 29).

பிராமணர்களின் வேள்விகளுக்கு நிலமும் பொருளும் சங்க கால மன்னர்கள்கொடுத்துள்ளார்கள் - ஆனால் சமூக ஆதிக்கத்தில் அப்போது பிராமணர்கள் இல்லை. சமூக ஆதிக்கத்திற்கு ஆரிய  பிராமணர்கள் எப்போது வருகிறார்கள்?

களப்பிரர் காலம் கர்நாடகப் பகுதியிலிருந்து படை எடுத்து வந்து கி.பி. 250 வாக்கில் தமிழ் மன்னர்களை வென்று தமிழ்நாட்டை அடிமைப்படுத்திய ஆரிய முகாமைச் சேர்ந்த களப்பிரர்  ஆட்சிக்காலத்தில்தான் ஆரியப் பிராமணர் மேலாதிக்கம் நிலை நாட்டப்பட்டது. வென்றவர் தோற்ற வரை அடிமைப்படுத்தினர். இதற்கான இலக்கியச் சான்றுதான்  ஆசாரக்கோவை நூல்!

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ள ஆசாரக்கோவை கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. திருக்குறள் சங்ககாலத்தில் எழுதப்பட்டநூல்.  களப்பிரர் காலப் பிராமண ஆதிக்கத்தின் சதியால் ஆசாரக் கோவையுடன் திருக்குறளையும்  பதினெண்கீழ்க்கணக்குத் தொகுப்பில் சேர்த்தார்கள். சமண நூல்போல் காட்டினார்கள்.

அந்த ஆசாரக்கோவை தான் தமிழில் முதல் முதலாகப் பிறப்புவழித் தீண்டாமையைப்பேசிய நூல். அதுவருமாறு: எச்சிலார் தீண்டார் - பசு, பார்ப்பார், தீ, தேவர்
உச்சந் தலையோடு இவை என்ப யாவரும் திட்பத்தால் தீண்டாப் பொருள் - 5.

எச்சிலார் எனில் இழிந்தோர். பசு, பிராமணர், தீ, தேவர் ஆகியோரை இழிந்தவர்கள்(எச்சிலார்) தீண்டக் கூடாது என்கிறது ஆசாரக்கோவை. “புனிதப் பசு”வின் பெயரால் -  வர்ணா சிரமவாதிகள்  இன்றும் மனிதர்களைக் கொலை செய்கிறார்கள்.

கீழ் மக்கள் மேல் மக்களைத் தொட்டால் மேல் மக்கள் குளிக்க வேண்டும் -ஆசாரக்கோவை - 10.

பார்ப்பனரை இகழ்வோர்க்கு ஐம்பூதமும் கேடு செய்யும் - 15.

திருமணம், தேவர், பிதிர்விழா, வேள்வி ஆகியவற்றின் பொருட்டு தானம் செய்யவேண்டும் - 40.

நான்கு வேதங்களைக் கற்ற பிராமணரைக் குருவாக ஏற்க வேண்டும் என்பது தான்கற்றோர், அறிவாளர் முடிவு - 61.

பிராமணர்களின் பேச்சைக் கேட்டு, தமிழர்களில் உள்ள மேட்டுக்குடிகள் தீண்டாமையை உருவாக்கிக் கொண்டனர் என்றே பெரியாரியர்கள் பரப்புரை செய்கிறார்கள். வென்ற களப்பிர  ஆரியர்கள் தமிழர்களுக்கெதிராகச் செயல்படுத்திய தீண்டாமையே  தமிழ்நாட்டில் தீண்டாமையின் தோற்றம்! இந்த உண்மையைப் பெரியாரியர்கள் உரைப்பதில்லை.

களப்பிரர் காலம் பொற்காலமா?
பெரியாரியர்கள் களப்பிரர் காலத்தைப் பொற்காலம் என்று போற்றுகிறார்கள். ஏன்? வேள்விக்குடி கல்வெட்டைச் சான்று காட்டுகிறார்கள்.

வேள்விக்குடி செப்பேடு கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கி.பி. எட்டாம்நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சியில்லை. பாண்டியர் ஆட்சியில் நடந்த நிகழ்வை அச்செப்பேடு கூறுகிறது.

பாண்டியன் நெடுஞ்சடையன் கி.பி. 768-ம் ஆண்டில் ஆட்சி  ஏற்றான். அம்மன்னனை கொற்கைக் கிழான் காமக்காணி நற்சிங்கன் என்ற பிராமணன் சந்தித்துப்  பின்வருமாறுகூறுகிறான் :

“மன்னா, உன் முன்னோர்களில் ஒருவரான பல்யாக சாலை முதுகுடுமிப்பெரு வழுதி எங்கள் முன்னோரான நற்கொற்றன் என்பான் நடத்திய வேள்விக்குத் தான மாகக்கொடுத்த வேள்விக்குடி
என்னும் ஊரைக் களப்பிரக் கலியரசர் பறித்துக் கொண்டார்” என்று முறையிட்டான். பாண்டியன் நெடுஞ்சடையன் வேள்விக் குடியை நற்சிங்கனுக்கு வழங்கினான் என்று வேள்விக்குடி  செப்பேடுகளில் ஒன்று கூறுகிறது.

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் காலம்சற்றொப்ப கி.மு. 2-ம் நூற்றாண்டு. பாண்டியன் நெடுஞ்சடையன் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு. (தமிழ்நாட்டுச் செப்பேடுகள் - 1 ச.கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் தமிழாய்வகம், 2002 - பக்கம் 247).

கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முதுகுடுமிப்பெருவழுதி தானமாகக் கொடுத்த வேள்விக் குடியை 1,000 ஆண்டுகளுக்குப் பின் பிராமணன் நற்சிங்கன் கேட்டானாம்; பாண்டியன் நெடுஞ்சடையன் கொடுத்தானாம். நம்பும்படியாகவா இருக்கிறது? இதற்கான ஒரே சான்று நற்சிங்கன் என்ற  பிராமணன்  கூறியதாக சொல்லும் வேள்விக்குடி செப்பேடு மட்டுமே!

பாண்டியன் நெடுஞ்சடையன் முன்னோர்களாக - முதுகுடுமிப் பெருவழுதி வரைஉள்ள வேறு எந்த மன்னர் பற்றிய செய்தியும் இல்லை.

பிராமணர்களுக்குப் பாண்டியர்கள் தானமாகக் கொடுத்த நிலங்களைக் களப்பிரர்கள்பிடுங்கினார்கள் என்பது பொது உண்மையா எனில் இல்லை என்கிறார். வரலாற்றாய்வாளர்  மயிலை சீனி.வேங்கடசாமி.

“களப்பிரர் வேள்விக்குடி தானத்தை இறக்கினார்கள் (நீக்கினார்கள்) என்பதுஉண்மைதான். ஆனால் அதன் காரணம் பார்ப்பனர் மாட்டு பகையன்று. அதற்குவேறு ஏதோ ஒரு  காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. களப்பிரர்பிராமணருக்குத் தானங்கொடுத்து ஆதரித்ததை “அகலிடமும் அமருலகும்” எனத்தொடங்கும் செய்யுள் கூறுகிறது.

“பொருகடல் வளாகம் ஒரு குடை நிழற்றி இருபிறப்பாளர்க் கிருநிதி ஈந்து மனமகிழ்ந்து. அருபுரி பெரும் அச்சுதர் கோவே” என்று அச்செய்யுள் கூறுவது காண்க. இதனால் களப்பிரர்
பார்ப்பனரை வெறுத்தனர் அல்லர் என்பது தெரிகிறது.”

(களப்பிரர் காலத் தமிழகம் - மயிலை சீனி. வேங்கடசாமி,
குயிலோசை பதிப்பகம் - 2005, பக்கம் 72, 73).

களப்பிரர்கள் பிராமண ஆதிக்கத்தை வெறுத்தவர்கள் அல்லர் என்ற மயிலையாரின்கூற்றை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுச் சான்று உள்ளது.

சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சியில் கண்டறியப்பட்ட கல்வெட்டுச் செய்தியை குணா அவர்கள் தமது “முன்தோன்றி மூத்தகுடி” நூலில் குறிப்பிடுகிறார். பூலாங்குறிச்சிக்
கல்வெட்டின் காலம் - களப்பிரர் காலம். வேள்விக்குடி செப்பேடுபோல் 1000 ஆண்டிற்கு முன் “நடந்த”  செய்தியைக் குறிப்பிடுவதன்று. களப்பிர அரசர்ஆணைப்படி வெட்டப்பட்ட கல்வெட்டு  பூலாங்குறிச்சி கல்வெட்டு.

அதில் சில வரிகள் :

....... (ழவரும்) ருஞ்ஞ்ங் கூடலூரு நாட்டுப் பிரமதாய.. சிற்றையூருப் பிரம்ம தாயக்கி

....... (ழமை)யும் (மீயா)ட்சியுங் கொண்டாளும் மவூருப்.... கடைய வயலென்னும்

....... புலத்தவன் விற்றுக் கொடுத்த புன்செ நிலனு

........ துப் பிரமதாயத்துப் பிரமதாயக் கிழவரா (ன)

......... வரு குடிகளையும் ........... டையாரும் பிரம தாய முடையாருந் நாடு காப்பாரும்புறங்காப்......

இக்கல்வெட்டுகள் வெள்ளேற்றான் மங்கலம், சிற்றையூர் ஆகிய பிரமதேயக்கிராமங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இந்தப் பிரமதேய நிலங்களைப் பெற்றுக்கொண்ட பிராமணர்களைப்  பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் “பிரமதேயக்கிழார்கள்” என்கின்றன. (முன்தோன்றி மூத்தகுடி, குணா - 2007 - பக்கம் 62, 66, 67).

களப்பிரர்கள் காலத்தில் பிராமணர்கள் கோலோச்சினார்கள் - அவர்களுக்குக் களப்பிரமன்னர்கள் பிரமதேய நிலங்களைத் தானமாகக் கொடுத்தார்கள் என்பதை சாரக்கோவையும், மயிலை  சீனி. வேங்கடசாமி அவர்கள் சுட்டிக்காட்டிய பாடலும், குணா அவர்கள் எடுத்துக்காட்டிய பூலாங்குறிச்சிக் கல்வெட்டும் ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கின்றன.

தமிழ் மன்னர்கள் பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுத்த நிலங்களையெல்லாம் களப்பிரர்கள் பிடுங்கினார்கள் என்று சிலர் கூறுவது அரைப்பேச்சு கொண்டு அம்பலம் ஏறும் செயலாகும்.

பிராமணர்களுக்குப் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி கொடுத்த நிலங்களைக்களப்பிரர்கள் பிடுங்கினார்கள் என்று வேள்விக்குடி செப்பேடு கூறுவது ஐயத்திற்குரியது. அது வேறு  ஏதோ ஒரு தனிநபர் காரணத்தால் நிகழ்ந்திருந்தாலும்களப்பிரர் காலம் பிராமண ஆதிக்கக் காலம் என்பது அவர்கள் கடைபிடித்த சமணத்தின் வழியே அறிய முடியும். சமணம் தமிழ்நாட்டில்  தமிழைப் புறக்கணித்து, பிராகிருதம், சமற்கிருதம் ஆகியவற்றை உயர்த்திப் பிடித்தது.

பல்லவர்கள் ஆந்திரப் பகுதியிலிருந்து வந்தவர்கள். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். தங்களைப்பிராமணர்கள் என்றும் தாங்கள் பரத்துவாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்  கூறிக்கொண்டார்கள். (பல்லவர்வரலாறு, டாக்டர் மா. இராசமாணிக்கனார்).

பல்லவர்கள் தமிழைப் புறக்கணித்தனர். பிராகிருதம், வடமொழி ஆகியவற்றை ஆட்சி மொழியாகக்கொண்டிருந்தனர். அவற்றில் பட்டயங்கள் வெளியிட்டனர். அவர்கள் ஆட்சியின் கடைசிப் பகுதியில் கிரந்த - தமிழ்ப்பட்டயங்களை வெளியிட்டனர். (மா. இராசமாணிக்கனார்).

பிராமணர்களின் கோட்பாடுகளை அரசின் கோட்பாடுகளாக மாற்றியவர்கள்பல்லவர்களே! இதனால்தான் பட்டயங்களில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது.

பல்லவர் ஆட்சியில் தமிழ்நாட்டில் பிராமணக் குடியேற்றங்கள் மிக அதிகமாக நடந்தன. ஆய்வறிஞர் கே.கே.பிள்ளை அவர்கள் பின்வருமாறு கூறுகிறார் :

“பல்லவர் காலத்தில் பிராமணர்களுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டது. (பிறர்க்கு உரிமையாய் இருந்த நிலங்களைப் பிராமணர்களுக்கு வழங்கினர். - பெ.ம.) இவ்வாறு வழங்கும் முன், அந்த நிலத்தின் சொந்தக்காரர் தனது உரிமையைப் பிராமணருக்கு மாற்றித் தர வேண்டும். அரசனும் தனது வரி விதிப்பு உரிமை தான மளிக்கக்கப்பட்ட நிலத்திற்கு இனிமேல் பொருந்தாது என்று விட்டுவிட வேண்டும். அந்த நிலத்தின் மீது காணி உரிமை (குத்தகை உரிமை) யாருக்கேனும் இருந்தால் அவர்கள் அவ்வுரிமையை விட்டுவிட வேண்டும்”. (தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும் - முனைவர் கே.கே. பிள்ளை - உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் - 2000 - பக்கம் 246).

பிராமணருக்கு வழங்கப்பட்ட பிரமதேய நிலத்தில் அரசு அதிகாரிகள் நுழையவே கூடாது. பிரமதேயமாக நிலம் வழங்கப்பட்ட சேதியை அறிக்கை ஓலை எழுதி ஊர் மக்கள் தங்கள்  தலைமீது வைத்து வெளியிட வேண்டும். பிரமதேய நிர்வாகத்தில் பிராமணர் மட்டுமே இருக்க வேண்டும். இவர்களுக்குப்“பெருமக்கள்” என்று பெயர்!” (நூல் : மேலது பக்கம் 247).

களப்பிரர் மற்றும் பல்லவர்களுக்கு முன் தமிழ் மன்னர்கள் சிலர் வேள்வி வளர்த்தனர். அதற்குத் தானம் கொடுத்தனர். ஆனால் பிராமணர்கள் ஆளவில்லை. பிராமணர்களின் வழிகாட்டலில்  ஆட்சி நடத்தவில்லை. ஆன்மிகச் சடங்கு செய்வோராக மட்டுமே பிராமணர்கள் இருந்தனர். பிராமணர்களில் நன்கு தமிழ் கற்ற சிலர் தமிழ் மன்னர்களுக்கு நல்ல நண்பர்களாக  இருந்திருக்கிறார்கள்.

இந்தப் பல்லவர் ஆட்சிக்குப் பிறகு பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர் ஆட்சிவந்தது. இவ் விருவரும் தங்களுக்கிடையே போரிட்டு வீழ்ந்த பின்னர் சிறிது காலம்சுல்தான்கள் ஆட்சியும். அதன் பிறகு விசய நகர - நாயக்க மன்னர்கள் ஆட்சியும்வந்தன. நாயக்க மன்னர்கள் நானூறு ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டனர். பிராமணர்கள் குறிப்பாக தெலுங்கு பிராமணர்கள் ஆதிக்கமும்  - சமற்கிருத ஆதிக்கமும் கோலோச்சிய காலம் விசயநகர - நாயக்க மன்னர்கள் காலம்! சாதி உயர்வு தாழ்வு கொடி கட்டிப் பறந்த காலம் அது! தமிழர்கள் அனைவரையும் “சூத்திரர்கள்”  என்று பிராமணர்கள் பட்டியலிட்ட காலம்!

கோயில்கள் முழுவதும் பிராமணர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. ஊர்ப் பெயர்கள், தெய்வங்கள் பெயர்கள் சமற்கிருதத்தில் மாற்றப்பட்டன. "திராவிடம்” என்று ஆரியர்கள் உருவாக்கிய  பெயரை தமிழுக்கு பிராமணர்கள் சூட்டிய காலம் இது!

17-ம் நூற்றாண்டில் - தஞ்சைப் பகுதியை  மராத்தியர்கள் ஆளத் தொடங்கினார்கள். அதுவும் பிராமண ஆதிக்க ஆட்சியே! தமிழும், தமிழரும் பின்னுக்குத் தள்ளப்பட்டகாலம் அது!

இராமப்பையன் என்ற தெலுங்கு பிராமணன் மதுரை நாயக்க மன்னரின் படைத்தளபதி. இவன் பழனியில் படைகளுடன் முகாமிட்டிருந்தபோதுதான் முருகன் கோயிலில் தமிழ்  இனப்பூசாரியை  நீக்கி பிராமண அர்ச்சகரை நிரந்தரமாக அமர்த்தினான்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான மிகக் கொடிய ஒடுக்குமுறைகள் நாயக்கர் ஆட்சியில் தான் நடந்தன. தேவதாசி முறையும் தமிழ்நாட்டில்  நாயக்கர் ஆட்சியில்தான் அறிமுகமானது  (தேவரடியார் வேறு).

மார்க்சியர்களும் பெரியாரியர்களும் “சோழர்கள் ஆட்சியில்தான் பிராமணர்களுக்கு பிரமதேய - சதுர்வேதி மங்கல நிலங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன. சமற்கிருதம்கோலோச்சியது;  தமிழ் புறக்கணிக்கப்பட்டது” என்கின்றனர். சோழர்களிலும்இராசராசனையே குறிவைத்துத் தாக்குகின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளுக்குச் சான்றுகள் தருவதில்லை!

இராசராசன் ஆட்சி மேன்மைகள்

பேரரசர் இராசராசன் எல்லாச் சாதியார்க்கும் நிலம் கொடுத்தார். அதற்கானகல்வெட்டுச் சான்றுகள் இருக்கின்றன. பறையர்களுக்கும் கம்மாளர்களுக்கும் இறையிலி (வரி இல்லாத) நிலம்  அளிக்கப்பட்டிருந்ததைத்  தெரிவிக்கும் கல்வெட்டை ஆய்வறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் “இராஜராஜேச்சரம்” என்ற தமதுநூலில் வெளியிட்டுள்ளார் (பக்கம் 425 - 427).

பறையர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களை இராசராசசோழன் தனியாகப் பிரித்து “சேரி”களில் ஒதுக்கி வைத்தான் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இராசராசசோழன் காலத்தில்,  சேர்ந்து வாழும் இடமே “சேரி” எனக் குறிக்கப்பட்டது. சேரி என்பது ஊருக்கு வெளியே இல்லை! ஊருக்கு நடுவே இருந்தது. தஞ்சைப் பெரியகோயிலை ஒட்டியேதான் தளிச்சேரி இருந்தது.

செய்யும் தொழில் அடிப்படையில் மக்கள் ஒன்றாக வாழ்ந்த இடங்கள் அவர்களதுதொழில் பெயர் அடிப்படையில் பறைச்சேரி (பறையர்கள் வாழும் இடம்), வண்ணாரச்சேரி
(வண்ணார்கள் வாழும் இடம்), கம்மாளச்சேரி (கம்மாளர்கள் வாழும்இடம்), பார்ப்பனச்சேரி (பார்ப்பனர்கள் வாழும் இடம்) எனக் குறிக்கப்பட்டது. நாகூர்அருகே இன்றும்
பார்ப்பனச்சேரி என்ற ஊர் உள்ளது. இவர்கள் இங்குதான் வாழவேண்டுமென்ற சமூகக் கட்டுப்பாடெல்லாம் இல்லை!

“தீண்டாச்சேரி” என்ற பெயரில் குடியிருப்பு அன்றைக்கு இருந்ததை சுட்டிக்காட்டுகின்றனர். இன்றைக்கு தீண்டாமைக்கு ஆளாகியுள்ள பறையர் வகுப்பு மக்கள், இராசராசன்  காலத்தில் பறைச்சேரி என தனிக்  குடியிருப்பில்  வாழ்ந்தார்கள்.

தீண்டாச்சேரி என்பது குற்றச்செயல்கள் செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டோர் எனவும், நோயால்  பாதிக்கப்பட்டோர்  வாழிடம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனால்,  இன்ன சாதி இன்ன இடத்தில்தான் வாழவேண்டுமென அப்போது சமூகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கான சான்று இல்லை!

பிராமண ஆதிக்கம் இருந்ததா?

இராசராசன் ஆட்சியில் கோயில்களும் அவற்றின் சொத்துகளும் பிராமணர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன என்று சிலர் கூசாமல் பொய் கூறுகிறார்கள். தஞ்சைப் பெரியகோயிலின்  சொத்துகளைப் பராமரிக்கும் பொறுப்பை சோழ மண்டலத்தைச் சேர்ந்த 118 கிராம மக்களிடம் ஒப்படைத்தார் இராசராசன், (இராஜராஜேச்சரம், குடவாயில்,பக்கம் 432)

இராசராசன் பிராமணர்களுக்கு இறையிலி நிலமாக அரசுதலையிட முடியாத நிலதானமாகக் கொடுக்கவில்லை; ஆண்டுக்கு ஒருமுறை கரை ஓலை முறையில் இடம்மாற்றி வேறு நிலம்
பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டது. என்பதற்கு தஞ்சைப்  பெருவுடையார் கோயிலில் உள்ள ”சோழச் சருப்பேதி மங்கலம் ஆயிரம்பிராமணருக்கு...” என்று தொடங்கும்  வரிகளைக் கொண்டகல்வெட்டைச் சான்று காட்டுகிறார் ஆய்வறிஞர் மே.து.இராசுகுமார். (நூல் - சோழர் கால நிலவுடைமைப்பின்புலத்தில் கோயில் பொருளியல் - பக்கம் 152,153).  மே.து.இரா. மார்க்சியர் என்பது  குறிப்பிடத்தக்கது.

இராசராசன் ஆட்சியல் பிராமணர்களுக்கு பிரமதேய நிலம் வழங்கப்பட்டது. அது இறையிலி நிலமாக (அரசுவரியில்லாத - முழு இறையாண்மையுள்ள நிலமாக) வழங்கப்படவில்லை.  அதே வேளை பறையர்கள், கம்மாளர்கள் போன்ற பல தமிழ்ச்சாதியினர்க்கு தேவதானமாக இறையிலி நிலம் வழங்கப்பட்டது.

நாயக்க மன்னன் மகாமண்டலேசுவரன் காலத்தியக் கல்வெட்டு தஞ்சைப் பெரியகோயிலில் உள்ளது. இறையிலி நிலமாக அல்லாமல் கரையோலை முறையில் உரிமை மாற்ற அடிப்படையில்  பிராமணர்களுக்கு சோழர்கள் ஆட்சியில் வழங்கப்பட்டிருந்த பிரமதேய நிலங்களை வரியில்லாத இறையிலி நிலங்களாகமாற்றி நாயக்க மன்னர் ஆணை பிறப்பித்ததை அக்கல்வெட்டு  கூறுகிறது. (நூல்:இராஜராஜேச்சரம் - குடவாயில் பாலசுப்பிரமணியன் - பக்கம் 432).

இந்த விஜயநகர - நாயக்கர் ஆட்சி பிராமணர்களுக்கு அதிகாரங்களையும், பிரமதேய இறையிலி நிலங்களையும் வாரி வழங்கியது பற்றி - பெரியாரியர்கள் விமர்சிப்பதே இல்லை!

ஆய்வறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் இராசராச சோழன் ஆட்சியின்முகாமையான 10 நிர்வாகிகளின் பெயரைப் பட்டியலிடுகிறார். இவர்களில் ஒருவர் மட்டுமே பிராமணர்.

1. சேனாபதி கிருஷ்ணன் இராமன் எனும் மும்முடிச் சோழ பிரம்மராயன் - இவர்படைத்தளபதி - பிராமணர். (இராசராசன் காலத்தில் தஞ்சைப் பெரிய கோயில்கட்டுமானப் பொறுப்பில் இருந்தவர்கள் பட்டியலில் இவர் பெயர்
ஆறாவது இடத்தில்வருகிறது - இராஜராஜேச்சரம் நூல்).

2. பரமன் மழபாடியான் மும்முடிச் சோழன் - படைத்தலைவர்களில் ஒருவர்.

3. சேனாபதி குரவன் உலகளந்தானான இராசராச மாரயன் - நில அளவைத் தலைவர்.

4. மதுராந்தகன் கண்டராதித்தன் - இராசராசன் சிற்றப்பா - கோயில்களின் கண்காணிப்பாளர்.

5. ஈராயிரவன் பல்லவரயன் ஆகிய மும்முடிச் சோழப்போசன் - திருமந்திரநாயகம்என்னும் ஆவணப்பதிவர்.

6. பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனாகிய தென்னவன் மூவேந்தவேளான் - தஞ்சைப் பெருவுடையார் கோயில் பூசைப் பணிகளின் கண்காணிப்பாளர்.

7. பாரூர் கிழவன் அரவணையான் மாலாரி கேசவன் - அரசியல் அதிகாரி.

8. இராசகேசரி நல்லூர் கிழவன் காறாயில் எடுத்த பாதம் - திருமந்திர ஓலை நாயகம் என்னும் ஆவணப் பதிவாளர்.

9. வேளாண் உத்தம சோழனாகிய மதுராந்தக மூவேந்தவேளான் - திருமந்திர ஓலை நாயகம் என்னும் ஆவணப்பதிவாளர்.

10. விளத்தூர் கிழவன் அமுதன் தீர்த்தகரன் திருமந்திரஓலை நாயகம் என்னும் ஆவணப் பதிவாளர்

(பிற்காலச் சோழர் சரித்திரம் - தி.வை.சதாசிவப்பண்டாரத்தார் பக்கம் 106 - 108)

மேற்கண்ட பத்து பேரில் முதலில் உள்ள சேனாபதி கிருஷ்ணன் இராமன் மட்டுமே பிராமணர்!

வர்ணாசிரம எதிர்ப்பு

இராசராச சோழன் வர்ணாசிரம ஆட்சி நடத்தினார் என்று சிலர் கூறுகின்றனர். அதற்கான சான்றுகளை எதுவும் இவர்கள் தரவில்லை!

பிராமணர்களைத் தண்டிக்கக் கூடாது என்கிறது மனுதருமம்! ஆனால், பல கோயில்களில் திருடி பிடிபட்ட பிராமணர்களை இராசராச சோழன் தண்டித்ததற்கு திருப்பனந்தாள் கல்வெட்டு, வேலூர்  திருவல்லம் கல்வெட்டு உள்ளிட்ட பல கல்வெட்டுச் சான்றுகள் இருக்கின்றன  (நூல் : ராஜராஜசோழன் பார்ப்பன அடிமையா?, டி.எஸ். கிருஷ்ணவேல், வெளியீடு - தமிழ் நூல் மன்றம்).

பிராமணர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யக்கூடாதுஎன்கிறது மனுதருமம்! ஆனால், தனது அண்ணன் ஆதித்தகரிகாலனைக் கொல்லத் துணை நின்ற பிராமணர்களின் பல தலைமுறைச்  சொத்துகளைப் பறிமுதல் செய்ததோடு, அவர்களை நாட்டைவிட்டே ஓடச் செய்து துரத்தியவன் இராசராச சோழன்!

அறுநூறு ஆண்டுகளுக்கு மேல் களப்பிரரும் பல்லவரும் பிராமணக் குடியேற்றத்தைஊக்குவித்து - எல்லா துறையிலும் பிராமண மேலாதிக்கத்தை நிலைநாட்டி வைத்திருந்தனர்.  தமிழ்மொழியை ஒடுக்கி சமற்கிருதம், தெலுங்கு ஆகியமொழிகளை ஆதிக்கத்தில் வைத்தனர்.

இந்தப் பின்னணியில் ஆட்சியைப் பிடித்தபிற்காலச் சோழர்கள் மெல்ல மெல்ல தமிழ் - தமிழர் உரிமைகளை நிலைநாட்டினர்.

இதில் பெரும்பாய்ச்சலை நிகழ்த்தியவர் இராசராசன். தேவாரத்தை மீட்டார். தமிழ்ப்பள்ளிகளை ஊக்கு வித்தார். தமிழ் ஓதுவார்களைக் கோயில்களில் அமர்த்தினார். அதேவேளை சமற்கிருதப்  பள்ளிகளுக்கு தடைபோடவில்லை. போட முடியாது!

தமிழ்நாட்டிற்கு இறையாண்மை கிடைத்து தமிழ்த் தேசிய ஆட்சி உருவானால் இன்றைய சூழலில் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகளுக்கு முழுத் தடைபோடமுடியுமா? மக்கள் சமற்கிருதப்  பெயர்களை சூட்டக் கூடாது என்று ஒட்டு மொத்தத்தடை ஆணை போட முடியுமா? முடியாது! இம்மாற்றங்களை மக்களிடம்விழிப்புணர்ச்சி உருவாக்கி நிதானமாகத்தான் செய்ய முடியும்.

உச்ச நீதிமன்றமே ஆணையிட்டும்கூட சபரிமலைக் கோயிலில் முழுமையாகப்பெண்களை வழிபட வைக்க கேரள இடதுசாரி ஆட்சியால்  முடியவில்லை. சிலபெண்களை காவல்துறை  துணையுடன் வலிந்து அழைத்துச் சென்று சபரிமலைக்கோயிலில் வழிபட வைத்தது இடதுசாரி அரசு. “சம்பிரதாயத்துக்கு எதிரான” இச்செயல்கள்தான் அண்மையில் நடந்த மக்களவைத்  தேர்தலில் சி.பி.எம். கட்சிதோற்றதற்கு முதன்மைக் காரணம் என்று அதன் நடுவண் குழு தன் திறனாய்வுசெய்துள்ளது.

மக்களிடம் போதிய விழிப்புணர்வில்லாத காலத்தில், அதிகாரத்திணிப்பால் செய்யப்படும் சீர்திருத்தங்கள் எதிர்விளைவைத்தான் உண்டாக்கும் என்பதற்கு இது சான்று! ஆனால், இராசராசன்
மட்டும் முரட்டுத்தனமாக சமற்கிருதப்பள்ளிகளை முழுவதுமாக மூடியிருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது என்னவகைஞாயம்?

பிற்போக்கான பழமைவாதத்தை மாற்றி சீர்திருத்தங்கள் செய்யும்போது, வெகுமக்களிடையே விழிப்புணர்ச்சியை உண்டாக்கி, அவர்கள் அவற்றை ஏற்கும்படிச்செய்ய வேண்டும். அதில்  அதிதீவிரம் காட்டி வெகுமக்கள் ஏற்காத சில மாற்றங்களைஅவசரப்பட்டு செய்தால், பிற்போக்குச் சக்திகள் வெகுமக்களை தங்கள் பக்கம்இழுத்துக் கொள்ளக் கூடிய ஆபத்து என்றுமே உண்டு!

இராசராசன் 29 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த காலத்தில் பிராமண ஆதிக்கத்தைப் பக்குவமாகத்தான் குறைத்தார். ஒரு பேரரசின் நிர்வாகத்தை ஏற்றிருப்பவர்கள் - எல்லா
சமூகங்களையும் அரவணைத்துச் செல்வது கட்டாயக் கடமை. அதேவேளைகளப்பிரர், பல்லவர் ஆட்சியில் புறந்தள்ளப்பட்ட தமிழர்களையும் தமிழ் மொழியையும்  முன்னுக்கு நிறுத்துதல்  கட்டாயக் கடமை. அவ்வாறான அணுகுமுறையைத் தான் இராசராச சோழன் கடைபிடித்தார்

தமிழ்த் திருமுறைகளைத் தொகுத்தார்; தேவாரத்தை மீட்டார். தமிழ்ப் பள்ளிகளுக்குஅரசு மானியம் கொடுத்தார். கோயில்களில் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்து ஓதுவார்களை  அமர்த்தினார்.

கிராம நிர்வாகத்தை குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார். ராராசராசனுக்கு முந்தைய காலத்திலிருந்தே சோழப்பேரரசு ஒற்றை மைய  அதிகார அரசாக இல்லை. கூட்டாட்சி நிர்வாகக் கட்டமைப்பாகத்தான் இருந்தது. என்பதை  ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரு கராசிமா தமது நூல்களில் குறிப்பட்டுள்ளார்.  சோழப் பேரரசு என்பது அரசுகளின் தொகுப்பு (Segmentary State) என்று கூறுகிறார். (South Indian History and Society (1985), History and Society in South India: The Cholas to Vijayanagar. Comprising South Indian History and Society and Towards a New Formation (2001)).

குடவோலை முறை வெறும் சீட்டுக்குலுக்கல் முறைதான் என்று இன்றைக்கு ஏகடியம் பேசுபவர்கள், அனைத்து அதிகாரங்களும் மன்னருக்கே என்று விளங்கிய அன்றைய மன்னராட்சி சூழலில் குடவோலை முறை கூட முற்போக்கானதுதான்என்பதை சிந்தித்துப் பார்க்கத் தவறுகின்றனர்.

இராசராசன் புதிய நில அளவை செய்து நில உரிமைக் கணக்குகளை சீர்படுத்தினார். தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட கோயில்களை வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி, கலைப்  பண்பாட்டுத் தலமாகவும் மக்களுக்கான பொருளாதாரமையமாகவும் செயல் படுத்தினார். இவற்றுக்கெல்லாம் நிறைய சான்றுகள் இருக்கின்றன. குறிப்பாக, தஞ்சைப் பெரிய கோயில் பல வகைகளில் குடிமக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உரிய மையமாகச் செயல்பட்டது.

நீர்ப் பாசனத் திட்டங்களை விரிவுபடுத்தினார் இராசராசன். காவிரியிலிருந்து உய்யக்கொண்டான் என்ற புதிய கிளை ஆற்றினை வெட்டி பாசன விரிவாக்கம் செய்தார். வீரநாராயண (வீராணம்) ஏரி, மதுராந்தகம் ஏரி என இன்றைக்கும் பயன்பட்டுவரும் பல ஏரிகள் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்டவைதான்!

களப்பிரர் காலத்திலேயே பிறப்புவழிச் சாதிப் பிளவுகளும் உயர்வு தாழ்வுகளும் தீண்டாமையும் உருவானதை ஏற்கெனவே பார்த்தோம். இராசராசன் சாதி வேறுபாடில்லாமல்  அனைத்து சாதியினரையும் இணைத்துச் செயல்பட்டார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

தஞ்சைப் பெரிய கோயில் திறப்பு விழாவில் கோவிலுக்குள் நடந்த நிகழ்ச்சியில்அனைத்து சாதியினரும் கலந்து கொண்டனர். இராசராசன் என்ற தமது பட்டத்தை அக்கோயில் சார்ந்த பலருக்கும் அங்கு வழங்கினார்.

பெருவுடையார் கோயில் கட்டுமானத் தலைமைப் பொறியாளர் குஞ்சரமல்லனுக்கு“வீரசோழன் இராசராசப் பெருந்தச்சன்” என்றும், அரசு ஆணைகளை முரசறைந்து அறிவிக்கும் பறையருக்கு “இராசராசப் பெரும்பறையன்” என்றும், பெருவுடையார் கோயிலில் முடிதிருத்தும் தொழிலாளிகளின் தலைவருக்கு “இராசராசப் பெருநாவிதன்”  என்றும் பட்டங்கள் வழங்கினார் இராசராசன். (குடவாயில்பாலசுப்பிரமணியன்).

தஞ்சைப் பெரியகோயிலின் கருவறைக்குள் பிராமணர்கள் மட்டும்தான் நுழையஅனுமதிக்கப்பட்டனர் என்றொரு கற்பனையான வாதத்தை சிலர் முன்வைக்கின்றனர்.
பெரியகோயிலின் கருவறைக்குள் சென்று லிங்கத்தை அங்கே நிறுவியவர்இராசராசசோழனின் ஆசானாக விளங்கிய கருவூர்த்தேவர். பெரியகோயிலின் முதல்அர்ச்சகராக
(அதாவது சிவாச் சாரியாராக) அமர்த்தப்பட்டவர் பவண பிடாரர் என்ற தமிழர். பெரிய  கோயிலுக்குள்  பிராமணர் மட்டுமே  அனுமதிக்கப்பட்டனர் என்ற வாதத்தை இச்சான்றுகள்  உடைக்கின்றன.

தேவரடியார் - தேவதாசி

தேவரடியார் என்ற பிரிவினர்க்கும் தேவதாசி என்ற பிரிவினர்க்கும் எந்தத் தொடர்புமில்லை.  தேவரடியார்  என்பவர்  விலை மகளிர் என்று  அழைக்கப்பட்ட பாலியல் தொழிலாளிகள் அல்லர். இறைத்தொண்டுக்கு தங்களை ஒப்படைத்துக்கொண்டு, கோயில் பணிக்கு வந்து விட்டவர்கள். தேவரடியார் என்பது “சிவனடியார்” போன்ற சொல்தான்.

தங்கள் சொத்துகளைக் கோயிலுக்கு எழுதி வைத்துவிட்டு அடியராக வந்த பெண்கள் குறித்து “தமிழகக்கல்வெட்டுகளில் பெண்கள்” என்ற தலைப்பில் பிரித்தானியப்  பெண்மணி லெஸ்லி சி ஓர் எழுதிய ஆய்வு நூல் கூறுகிறது. “கடவுளுக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர்  என்ற பொருளில்‘தேவரடியாள்’ பெயர் வந்தது” என்று
குறிப்பிடுகிறார். இவர்கள் அக்கோயில்களுக்குக் கொடைகள் வழங்கி, தாங்களும் கோயில் பணிக்கு வந்தவர்கள். நிலங்கொடுத்த தேவரடி யார் பட்டியலையும் லெஸ்லி சிஓர் வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் - லெஸ்லி சி ஓர், விடியல் வெளியீடு).

அரசக்குலப் பெண்களும், நிலவுடைமைப் பெண்களும் தேவரடியராகத் தங்களை ஒப்படைத்துக் கொண்டு கோயில்களுக்கு வந்தார்கள். அவர்களின் பெயர் அரசக்குலப் பெண்களின் பெயர்களாக இருப்பதும் கவனத்துக்குரியது. சோழ குல சுந்தரி, இரவி குல மாணிக்கம், வீரசோழி, சோழ சூளாமணி, ராஜசூளா மணி, குந்தவை, சோழமாதேவி போன்றவை தேவரடியார்களின்
பெயர்களாக கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த தேவரடியார்பலரும் பிற கோயில்களுக்கு தானம் வழங்கும் அளவிற்கு செல்வந்தர்களாகவும் இருந்துள்ளனர். பலர் திருமணம் செய்து கொண்டும் வாழ்ந்துள்ள
செய்திகளை லெஸ்லி சி ஓர் குறிப்பிடுவது, தேவரடியார்களின் அன்றைய சமூக நிலையைக் காட்டுகிறது.

தேவரடியார் என்பவர்கள் தேவதாசிகள் அல்லர்! தேவதாசி முறை தமிழ்நாட்டில் விஜயநகர - நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் தான் அறிமுகமானது.  இளம்பெண்களை  பொட்டுக்கட்டிக் கோயிலில் விற்றுவிடுவது “தேவதாசி” முறையின் ஒருகூறு!

“தேவதாசி மரபு” என்ற நூல் எழுதிய வி.எம். சுந்தரம் அவர்கள், தேவதாசி என்றசொல்லை முதன் முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கர்நாடகத்திலுள்ள அலனஹள்ளியில்  காணப்படுகிறது என்றும், அது கி.பி. 1113 -ம் ஆண்டைச்  சேர்ந்தது என்றும் கூறுகிறார் (மருதம் வெளியீடு, பக்கம் 16 - 17).

இராசராச சோழன் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி - பதினோறாம் நூற்றாண்டின் முதல் பகுதி! இந்தக் காலத்தில தேவதாசி முறையை இராசராசன்
அறிமுகப்படுத்தினார் என்றுசொல்வது, சான்றுகள் அற்ற கூற்று!

விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில்தான் தேவதாசி முறை தமிழ்நாட்டுக்கோயில்களில் அறிமுகமானது என்பதை பெரியாரியர்களும், மார்க்சியர்களும் கூறுவதில்லை!

இராசராச சோழன் மீது ஏதோவொரு வகை பகை உணர்ச்சி கொண்டு கூறுவது போல்தான், இவர்களுடைய திறனாய்வு  இருக்கிறது. இராசராச சோழனைத் தாக்குவதன் மூலம்
தமிழினத்தின் பெருமைகளைத் தாக்குகிறோம் என்ற மனமகிழ்ச்சியில்தான் அவர்கள் இவ்வாறெல்லாம் புனைந்துரைக்கிறார்கள் என்று புரிகிறது.

மன்னராட்சி பற்றி

இராசராசசோழன் ஆட்சியில், அதற்கு முன்னரும் பின்னரும் இருந்த மன்னராட்சிகளைவிட ஓப்பீட்டளவில் சிறப்பான ஆட்சி நிர்வாகம், அனைவரையும் சமமாகப் பார்க்கும்  பார்வை, தமிழ் மொழி  வளர்ச்சிக்கு ஏற்பாடு செய்தல், பாசனமேலாண்மை, தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட கலைப் படைப்புகள் மற்றும் ஆன்மிகச் சிறப்புகள் போன்ற துறைகளில் தமிழ்நாடு போற்றத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளன. அவர் சைவராக இருந்தும், வைணவ - பௌத்த சமயங்களுக்குக் கொடைகள் அளித்திருக்கிறார். பிராமண சமற்கிருத மேலாதிக்கத்ததை  மட்டுப்படுத்தியிருக்கிறார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மன்னராட்சி குறித்து ஆய்வு செய்யும்போது, குறிப்பிட்ட மன்னரின் செயல்பாடுகள் சமூக வளர்ச்சிக்குக் கூடுதல் பங்களித்திருந்தால்  அதை நாம் பாராட்ட வேண்டும்.

இரசியாவில் மகா பீட்டரின் (Peter The Great) 200-ம் ஆண்டு  விழா கொண்டாடப்பட்டபோது லெனின் மகா பீட்டரின் சிறப்புகளை பாராட்டி எழுதினார். மேற்கு ஐரோபாவில் நிகழ்ந்த தொழில்  புரட்சி சார்ந்த மறுமலர்ச்சி சிந்தனைகளும், சமூகச் சீர்திருத்தச் செயல்பாடுகளும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உண்டாகாமல் இருந்தது. மன்னர் மகா பீட்டர்தான் மேற்கு ஐரோப்பிய
சீர்திருத்தங்களை இரசியாவில்அறிமுகப்படுத்திப் பரவச் செய்தார் என்று லெனின் பாராட்டினார்.

மங்கோலிய கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் இன மன்னன் செங்கிஸ்கானுக்கு நினைவுச்சின்னம் எழுப்பிப் போற்றினர். மராட்டிய வீரசிவாஜி பிராமணர்களுக்குத் தாசனாக ஆட்சி புரிந்தார். அவரை மண்ணின் மைந்தன் எனப் போற்றுகிறார் மராட்டியத்தின்சிர்த்திருத்தத்  தலைவர் ஜோதிபா பூலே.

மன்னராட்சிக்கும் முற்போக்குப் பாத்திரம் உண்டு. அது அந்தந்த மன்னரைப் பொறுத்தது!

மன்னராட்சியை இன்றைய முன்னேற்றங்களோடு ஒப்பிட்டு முற்றிலும் விமர்சிப்பதுதவறு; மன்னராட்சியில் சமூக முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லையெனக் கதவடைப்பு செய்வதும் தவறு!

தமிழர் மரபின் பெருமை மிக்கச் சின்னமாக விளங்கும் தமிழ்ப் பேரரசன் இராசராசன்புகழ் நிலைக்கட்டும்!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2019 சூலை இதழில் வெளியான கட்டுரை இது. கட்டுரையாளர்பெ. மணியரசன், இதழின் ஆசிரியர் மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஆவார்).
First published: July 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்