மு.க.ஸ்டாலினுக்கு திரைத்துறை சார்பில் பாராட்டு விழா - திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்ரமணியம்

மு.க.ஸ்டாலினுக்கு திரைத்துறை சார்பில் பாராட்டு விழா - திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்ரமணியம்

மு.க.ஸ்டாலின்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திரைத்துறையைச் சேர்ந்த அனைத்து சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க மட்டும் 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன்மூலம், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராவது உறுதியாகியுள்ளது. அதனையடுத்து, நாடு முழுவதுமுள்ள பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில், திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்ரமணியம், ‘தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். கருணாநிதி வெற்றி பெற்ற பின்னர் திரைத்துறை சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளுவார். அனைத்து சங்கமும் இணைந்து தி.மு.க தலைவருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளோம். திரைத்துறைக்கு பல சலுகைகளை தி.மு.க வழங்கி உள்ளது.

  சென்னை மேயராக இருந்த போது எந்த அளவிற்கு பணியாற்றினார் என அனைவருக்கும் தெரியும். அதுபோல தமிழகத்தை சிறப்பாக வழி நடத்துவார். திரையரங்குகள் ஒரு ஆண்டாக மூடப்பட்டுள்ளது. சொத்து வரி, தொழில்வரி, மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். 8 சதவீத எல்.பி.டி வரியை தள்ளுபடி செய்யவேண்டும். அதனால் டிக்கெட் விலை 15 வரை குறையும்.

  உதயநிதி ஸ்டாலின் திரைத்துறையை சார்ந்தவர். அதன் சிரமங்களை உணர்ந்தவர். தி.மு.க ஆட்சியில் எங்களுக்கு விடிவு காலம் வரும் என நம்புகிறோம். கருணாநிதி திரைத்துறையினரிடம் மென்மையான போக்கை கடைபிடித்தார். அதனையே தி.மு.க தலைவர் ஸ்டாலினும் பின்பற்றுவார் என நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: