ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழுக்கு வெறும் ரூ.74 கோடி, சமஸ்கிருதத்துக்கு ரூ.1,488 கோடி நிதியா? மீண்டும் எழுந்த சர்ச்சை

தமிழுக்கு வெறும் ரூ.74 கோடி, சமஸ்கிருதத்துக்கு ரூ.1,488 கோடி நிதியா? மீண்டும் எழுந்த சர்ச்சை

தமிழ் - சமஸ்கிருத நிதி

தமிழ் - சமஸ்கிருத நிதி

கடந்த 8 ஆண்டுகளில் தமிழை விட சமஸ்கிருத மொழிக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

கடந்த 8 ஆண்டுகளில் தமிழை விட சமஸ்கிருத மொழிக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றன. புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு அதிக அளவு நிதியும், உலகத்தின் பழமையான மொழியாக இன்றும் பேசப்படும் தமிழுக்கு குறைவான அளவு நிதியும் ஒதுக்கப்படுவதாக தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமஸ்கிருதம் - தமிழ் தொடர்பாக மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. மக்களவையில் சமீபத்தில் தமிழ், சமஸ்கிருத வளர்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார் மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார். அதில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மற்றும் மத்திய சமஸ்கிருத பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளின் விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

அதன்படி, 2014ஆம் ஆண்டு முதல் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு ரூ.74.1 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதே சமயம் மத்திய சமஸ்கிருத பல்கலைக் கழகத்திற்கு ரூ.1487.9 கோடியை ஒதுக்கியுள்ளது. அதாவது, தமிழை விட சமஸ்கிருதத்திற்கு பல மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை பகிர்ந்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஜோதிமணி, கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ரூ.1,488 கோடி, தமிழுக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு. நாடாளுமன்றத்தில் எனது கேள்விக்கு மத்திய மோடி அரசு பதில். தமிழ்நாட்டிற்கும், தமிழுக்கும் எதிரானது பாஜக என்று விமர்சித்துள்ளார்.

First published:

Tags: Jothimani, Sanskrit, Tamil, Union Govt