அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் இப்போகிரெடிக் உறுதிமொழி மட்டுமே ஏற்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கொரோனா காலகட்டத்தில் மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மையம் விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் காலகாலமாக தமிழ் மொழியில் தான் உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அந்தவகையில், மதுரையில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது.
மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் தற்காலிகமாக காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நேரத்தில் இது தேவையற்ற செயல், இதற்கு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - இன்று டாஸ்மாக் விடுமுறை... நேற்று ஒரே நாளில் ₹252.34 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
மேலும் அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது எனவும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இப்போகிரெடிக் (hippocratic oath) உறுதிமொழி மட்டும் தான் ஏற்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது என்றார்.
ஐஐடியில் 198 நபர்கள் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் இன்று ஒரு நபருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி விவகாரத்தில் மக்களுடைய ஆர்வம் மிகவும் குறைந்துள்ளது. தடுப்பூசி போடுவதில் மக்களை வற்புறுத்த முடியாது அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். 40 லட்சம் பேர் முதல் தவணையும், 1.48 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும், 10 லட்சம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றார். தடுப்பூசி செலுத்தாத அனைவருக்கும் மெசேஜ் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் தொடர்புகொண்டு அவர்களை தடுப்பு ஊசி செலுத்துவதற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
வெயில் காலத்தை பொருத்தவரை மக்களுக்கு கோடைகால முகாம் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விலங்குகளுக்கும் குடிதண்ணீர் வழங்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொது மக்களும் அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும் என ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.