தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது வரவேற்கத்தக்கது என கூறியுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் வன்னியர் அமைப்புகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகின்றன. கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசிடம், வன்னியர் அமைப்புகள் பலமுறை கோரிக்கை விடுத்தன. ஆனால், அக்கோரிக்கையை மதிக்காத எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, கடந்த பிப்ரவரி மாதம், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.
ஆனால், இது தற்காலிகமானதுதான் என்று எடப்பாடி பழனிசாமி புது விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார். இதனை உறுதி செய்யும் வகையில், 10.5% உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்கள் பேசியிருந்தனர். இதனையடுத்து, அதிமுக அரசு வழங்கிய வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு என்பது சட்டமன்ற தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி அரசு நடத்தும் நாடகம் என்றும் வன்னிய சமுதாயத்தை ஏமாற்றும் செயல் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அப்போதே குற்றம்சாட்டியிருந்தது.
பின்னர், திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம் பெற்று சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தேன். விக்ரவாண்டி இடைத்தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் உறுதியளித்திருந்தார்.
அதன்படி, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டிருப்பது வரவேற்கதக்கது. அதோடு, சீர் மரபினருக்கு 7%, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% உள் ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. இதன் மூலம் திமுக அரசானது சமூகநீதிக்கானது என்பது மீண்டும் நிருபணமாகிறது. முதலமைச்சர் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியின் போது, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதவிகள், இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு செய்யப்பட்ட நிதியுதவி, பென்ஷன், வன்னியர் நல வாரியம் அமைக்கப்பட்டது. அவரது வழியில் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருப்பது இது கலைஞரின் ஆட்சி என்பதை உறுதிப்படுத்துகிறது.
Must Read : வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும்... முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராமதாஸ்!
கல்வி, வேலைவாய்ப்பில் 10.5% உள் இடஒதுக்கீடு வாயிலாக, வன்னியர் சமூக மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதார நிலையும் உயருவதற்கான வழி ஏற்பட்டுள்ளது. எனவே, உள் ஒதுக்கீடு கோரி தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வன்னியர் அமைப்புகளுக்கும், அனைத்து வன்னிய தலைவர்களுக்கும் 10.5% உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திய மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மீண்டும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MK Stalin, Vanniyar Reservation, Velmurugan