’புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் துவங்கியது.. விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும்..’ - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
’புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் துவங்கியது.. விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும்..’ - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி உதயகுமார் (கோப்புப்படம்)
தமிழகம் முழுவதும் புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் துவங்கியது என்றும் விரைவில் நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுபாட்டு அறையில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிவர் புயலால் ஏற்பபட்டுள்ள பாதிப்புகள், மேற்க்கொள்ளபட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்ததால் மிக பெரிய பாதிப்பு ஏற்படாமல் தற்போது தவிர்க்கப்பட்டு உள்ளது. இந்த புயலை பொறுத்தவரை தற்போது வரை எந்த ஒரு மீனவர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக 3 உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் கூறினார்.
மேலும் தமிழகத்தில் தற்போது வரை 3085 சிறப்பு முகாமில் 2,27,317 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் நிவர் புயல் காரணமாக 101 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 26 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் சேதமடைந்த பயிர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க மாவட்ட வாரியாக பணிகள் துவங்கி உள்ளதாக தெரிவித்த அவர், கணக்கெடுப்பு எடுத்து முடித்த பின்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.
அதே போன்று தற்போது புயலால் பாதிக்கப்பட்டு உள்ள மாவட்டங்களில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் உள்ளாட்சி துறை சார்பாக புயல் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் உள்ள இயந்திரங்களை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் பணி ஏற்கனவே துவங்கி உள்ளதாக தெரிவித்தார்.
சென்னையில் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை நீர் செல்ல முடியாமல் இருக்கும் இடங்களில் உடனடியாக நீக்குவதற்காக தொடர்ந்து மாநகராட்சி சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியிடுவதால் மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் முதல்வர் நேரடியாக களத்திற்கு சென்றதால் மக்கள் அச்சத்தில் இருந்து மீண்டதாகவும் புயல் நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு பாதிப்பு இல்லாமல் இந்த புயலில் இருந்து காப்பாற்றியதற்கு மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.