அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பாவுக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் என்ன?

துணைவேந்தர் சூரப்பா.

மத்திய அரசுக்கு கடந்த ஜூன் மாதத்தில் தன்னிச்சையாக கடிதம் எழுதிய சூரப்பா, சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், அதற்கான நிதி ஆதாரத்தை பல்கலைக் கழகமே உருவாக்கும் என்று தெரிவித்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டது முதலே அடுத்தடுத்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் சூரப்பா.  அண்ணா பல்கலைக்கழகத்தில் 2015-ஆம் ஆண்டு முதல் துணைவேந்தர் பதவி காலியாக இருந்த நிலையில், 2018-ம் ஆண்டில் சூரப்பாவை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார்.

  கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த சூரப்பா, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகவும், பேராசிரியராகவும் பணியாற்றினார்.

  பின்னர் ரோப்பாரில் உள்ள ஐஐடி-யில் நிறுவன இயக்குராகவும், இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். தமிழகத்தில் தலைசிறந்த கல்வியாளர்கள் பலர் இருக்கும் நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரை துணைவேந்தராக நியமித்ததற்கு அரசியல் கட்சியினர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

  துணை வேந்தராக நியமனம் செய்யப்படும் நபர், மரியாதை நிமித்தமாக உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளரை சந்திப்பது வழக்கம். ஆனால் சூரப்பா உயர்கல்வித்துறை அமைச்சரையோ அப்போதிருந்த உயர்கல்வித் துறை செயலரையோ சந்திக்காமல் தவிர்த்தார். பொறியியல் மாணவர் சேர்க்கை குழுவின் தலைவராக சூரப்பா இருந்த நிலையில், அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக அப்போதைய உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மாவை அரசு நியமித்தது.

  இதனால், 22 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது என துணைவேந்தர் சூரப்பா அதிரடியாக அறிவித்தார். இதனால், சூரப்பாவிற்கும் அரசுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்தது.

  அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவை துணைவேந்தர் சூரப்பா வரவேற்றார். ஆனால், இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வரும் என்பதால், சிறப்பு அந்தஸ்தை ஏற்பதில் தமிழக அரசு தயக்கம் காட்டியது.

  இந்த நிலையில், மத்திய அரசுக்கு கடந்த ஜூன் மாதத்தில் தன்னிச்சையாக கடிதம் எழுதிய சூரப்பா, சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், அதற்கான நிதி ஆதாரத்தை பல்கலைக்கழகமே உருவாக்கும் என்று தெரிவித்தார்.

  Also read... அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது 200 கோடி ரூபாய் ஊழல் புகார் - விசாரணைக் குழு அமைத்தது தமிழக அரசு  இந்நிலையில், கொரோனா காரணமாக இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து அரியர் தேர்வு எழுத பணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது.

  இதுகுறித்து விளக்கம் கேட்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு சூரப்பா கடிதம் எழுதினார். இதுகுறித்து விளக்கம் அளித்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், அரியர் மாணவர்களை தேர்ச்சி அடையச் செய்தது தவறு என்று தெரிவித்தது. இவ்வாறு அரசுடன் மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில், சூரப்பா மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  Published by:Vinothini Aandisamy
  First published: