Home /News /tamil-nadu /

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு எதிரான திமுகவின் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு எதிரான திமுகவின் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால் இட ஒதுக்கீடு, வார்டு மறுவரையறைகள் செய்த பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் புதிகாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து இதர மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பளித்தது.

இதையடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்த மாநில தேர்தல் ஆணையம், புதிய தேர்தல் அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27,30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களான நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது.

இந்நிலையில் பெண்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததால் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முறையிட்டுள்ளன. பதவிகளுக்கான இடஒதுக்கீட்டை முழுமையாக வரையறை செய்த பின்பே தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அக்கட்சிகள் கூறியுள்ளன.

தலைமை நீதிபதி போப்டே அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இது குறித்து முறையிட்டதை அடுத்து மனுவாகத் தாக்கல் செய்ய அறிவுறுத்திய தலைமை நீதிபதி, வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Local Body Election 2019

அடுத்த செய்தி