முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனை முன்னரே விடுவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
இந்த வழக்கின் மத்திய, மாநில அரசுகள் சார்பில் அனைத்து வாதங்களும் கேட்கப்பட்டு, விசாரணை மே 11ஆம் தேதி நிறைவடைந்தது. அன்று தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் விசாரணை நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஆளுநர் முடிவெடுக்க கால தாமதம் செய்தது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது.
வழக்கின் விசாரணையில் பேரரிவாளன் விடுதலைக்கான அதிகார வரம்பு ஆளுநரிடம் உள்ளதா என்பது விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆளுநர் 2 முதல் 3 ஆண்டுகள் முடிவெடுக்காமல் தாமதித்தது ஏன்? பல ஆண்டுகள் தாமதித்ததற்கு என்ன பதில் தர நினைக்கிறீர்கள் எனவும் ஆளுநர் சார்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க கூறியதும், மனுவை குடியரசு தலைவரிடம் அனுப்பியது ஏன்? மாநில அமைச்சரவை முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? என நீதிமன்றம் கேள்விகள் எழுப்பியது. தொடர்ந்து ஆளுநரின் முடிவுகள் மாநில அரசு அதிகாரத்திற்குள் வருகிறது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
மதமாற்ற தடை சட்டத்திற்கு கர்நாடகா ஆளுநர் ஒப்புதல்
கடந்த 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 9ஆம் தேதி பிணை வழங்கியது. முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பும், குடியரசு தலைவருக்கே உள்ளது என மத்திய அரசு தரப்பும் கூறியுள்ளன. இந்நிலையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.