உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் தமிழக அரசு அற்பத்தனமான காரணங்களைக் தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. இதை ஏற்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த 4 மாதங்களுக்குள் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசத்தை நீட்டிக்க கோரி மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் முதல் வாரம் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தல் நடத்த கால அவகாசம் வழங்குவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள் "தேர்தல் நடத்தக் கோரி மனு தாக்கல் செய்த பின் தற்போது தள்ளிவைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஆதரவு தருவது ஏன் என்று மனுதாரருக்கு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து வாதிட்ட தேர்தல் ஆணைய வழக்கறிஞர் முகுல் ரோகத்கி "சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த பின்னர் தற்போது 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 12 ஆம் தேதி அந்த தேர்தல்கள் முடிவடையும். அதன் பின்னர் நகர்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்த ஏதுவாக 6 மாதம் வரை அவகாசம் வேண்டும். மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதியதாக 6 மாநகராட்சிகள், 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான எல்லைகளை மறுசீரமைத்து தேர்தல் நடத்த வேண்டும். நகர்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நகர்புற உள்ளாட்சிகளுக்கு முதல் கட்டமாக 487 டவுன் பஞ்சாயத்துகளுக்கு டிசம்பர் மாதத்துக்குள்ளும், இரண்டாம் கட்டமாக 138 பேரூராட்சிகள், 21 மாநகராட்சிகளுக்கு மார்ச் மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் தமிழக அரசு அற்பத்தனமான காரணங்களைக் தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. இதை ஏற்க முடியாது", என கண்டனம் தெரிவித்து ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னர் 4 மாதங்களில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.