Home /News /tamil-nadu /

நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடமுடியாது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடமுடியாது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.

    மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. எனினும் இந்த குழுவின் பரிந்துரைகளை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்துமாறும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

    ஆனால் இந்த இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தக்கோரி தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. முன்னதாக, இந்த வழக்கில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு சாத்தியங்கள் இல்லை என்று தெரிவித்திருந்தனர்.

    இந்தவழக்கில் இன்று தீர்ப்பு வந்தது. இன்றைய தீர்ப்பில், ‘நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு உத்தரவிட முடியாது. 27% இடஒதுக்கீடையும் வழங்க உத்தரவிட முடியாது’ என்று குறிப்பிட்டனர்.


    அதன்மூலம், இந்த ஆண்டு இதர பிற்படுத்தப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு கிடைக்கப்பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: OBC Reservation, Supreme court

    அடுத்த செய்தி