தீபாவளி பண்டிகை வரும் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்கள் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையாக ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்கள் தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தோலோ, வெடித்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படாத போதிலும், காளி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இதேபோல், கர்நாடகாவில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கூறினார்.
மேலும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை செய்ய விதித்துள்ள தடையை மறு பரிசீலனை செய்யக்கோரி ஒடிசா மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர்களுக்கு, தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அதில், நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 விழுக்காடு தமிழகத்தில் இருந்து உற்பத்தி செய்யபடுவதாக தெரிவித்துள்ள அவர், தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனையை நம்பி சுமார் 8 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பசுமை பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாது என கூறியுள்ளார். இதனால் தங்களது முடிவுகளை மறுபரிசீலனை செய்து பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.