ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு.. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு.. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்

ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈபிஎஸ் தரப்பில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமா்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று தொடங்கியது.

இந்த வழக்கில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், அதிமுக கட்சி தரப்பு வாதம் கேட்கப்பட்டது. அதில், “உரிய நடைமுறைகளை பின்பற்றியே பொதுக்குழு நடைபெற்றது, அதனால்தான் உயர்நீதிமன்றமும் ஏற்று உத்தரவு பிறப்பித்தது. கட்சியில் எந்த ஆதரவும் இல்லாத ஒருவர், பொதுக்குழு முடிவை எதிர்ப்பது அடிப்படையற்றது. கட்சியின் மீது அதிருப்தி இருந்தால் முறையிட வேண்டிய இடம் தேர்தல் ஆணையம்தான். தனக்கு மெஜாரிட்டி இல்லையென்பதால் ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை” என தெரிவித்தது.

இது தொடர்பாக பதில் வாதம் அளித்த ஓபிஎஸ் தரப்பு, “ அதிமுகவில் இரட்டை பதவிகளை உருவாக்க வேண்டும் என கூறியதே இபிஎஸ் தரப்புதான், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்ட பின் அனைத்து நடவடிக்கைகளும் சரியாக சென்றன. அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும், யாரும் போட்டியிடாததால் ஒருங்கிணைப்பாளர் நேரடியாக தேர்வாகினார். பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்பதற்காக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை நீக்குவதா?

இரட்டை தலைமை காலாவதியாகிவிட்டதாக இபிஎஸ் தரப்பு கூறுவதை ஏற்க முடியாது. இரட்டை தலைமை காலாவதியான காரணத்தை இபிஎஸ் தரப்பு தெரிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி ஜூலை 11 நடைபெற்ற பொதுக்குழு சட்டவிரோதமானது. பொதுக்குழு நோட்டிஸில் இல்லாத தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. முந்தைய பொதுக்குழு நோட்டீஸ்களை ஒப்பிட்டு பார்த்தாலே புரியும்” என தெரிவித்தது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான சட்ட விதிகளில் தெளிவான புரிதல் இல்லை, கட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பதை தொடர்ந்து நீதிமன்றங்கள் கண்காணிக்க முடியாது. யார் பக்கம் தவறு, சரி என்பதை நாங்கள் முடிவு செய்ய தேவையில்லை, இடைக்காலத் தீர்வு வழங்கப்பட்டாலும் நீண்டகால செயல்பாட்டிற்கு என்ன தீர்வு? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

First published:

Tags: ADMK, OPS - EPS, Supreme court