சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சுதாகரனை, 89 நாட்கள் முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு, தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத் தண்டனை, 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியுடன் முடிகிறது.
மூவரும் அனுபவித்த சிறைகாலத்தை கணக்கில்கொண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலையாக வாய்ப்பு என, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விக்கு கர்நாடக சிறைத்துறை பதில் அளித்து இருந்தது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் சுதாகரன் தரப்பு, பெங்களூரு 34-வது தனி நீதிமன்றத்தை அணுகியது. அதில் சுதாகரன் கூடுதலாக 92 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில், முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி சிவப்பா, தண்டனை காலம் முடிவடைந்து இருந்தால் அவரை விடுதலை செய்யலாம் என சிறைத் துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும் சுதாகரன் செலுத்தவேண்டிய அபராதத் தொகை 10 கோடி ரூபாயை செலுத்திய பிறகு அவர் எந்த நேரமும் விடுதலை ஆகலாம் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் அவரது சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.