கார்த்தி சிதம்பரத்திற்கு சுதர்சன நாச்சியப்பன் ஆதரவு!

கார்த்தி சிதம்பரம்-சுதர்சன நாச்சியப்பன்

செயல்வீரர்கள் கூட்டம் முடியும் வரை சுமார் அரை மணி நேரம் காத்திருந்து கார்த்தி சிதம்பரத்திற்கு சுதர்சன நாச்சியப்பன் ஆதரவு தெரிவித்தது கட்சியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிவகங்கையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்து வந்த அக்கட்சியைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், கார்த்தி சிதம்பரத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ்-க்கு ஒதுக்கப்பட்டிருந்த சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக அந்தக் கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதனால், அந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த சுதர்சன நாச்சியப்பன் கடும் அதிருப்திக்குள்ளானார்.

தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்த அவர், வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்துள்ளது மக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது என்றும், ப.சிதம்பரத்தின் குடும்பத்தை மக்கள் வெறுக்கிறார்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

சுதர்சன நாச்சியப்பனின் கருத்தால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. அவருக்கு கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து சுதர்சன நாச்சியப்பனை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டனர்.

சுதர்சன நாச்சியப்பன்


இந்நிலையில், காரைக்குடி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்த சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி முன்னிலையில் கார்த்தி சிதம்பரத்துடன் கைகுலுக்கி தனது ஆதரவைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்துடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிவகங்கைத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்பதே தன்னுடைய எண்ணம் என தெரிவித்தார்.

செயல்வீரர்கள் கூட்டம் முடியும் வரை சுமார் அரை மணி நேரம் காத்திருந்து கார்த்தி சிதம்பரத்திற்கு சுதர்சன நாச்சியப்பன் ஆதரவு தெரிவித்தது கட்சியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also see... மறுக்கப்பட்ட குக்கர் சின்னம்... எடுபடுமா புதிய சின்னம்?
Published by:Vaijayanthi S
First published: