Home /News /tamil-nadu /

பாட்டி சொன்ன வார்த்தையால் உயரங்களைத் தொட்ட அமுதா ஐ.ஏ.எஸ்..

பாட்டி சொன்ன வார்த்தையால் உயரங்களைத் தொட்ட அமுதா ஐ.ஏ.எஸ்..

அமுதா -ஐஏஎஸ்

அமுதா -ஐஏஎஸ்

தமிழகத்திலிருந்து தற்போது பிரதமர் அலுவலகத்தின் இணை இயக்குனராக பொறுப்பேற்று இருக்கிறார் அமுதா ஐஏஎஸ். இவர் யார்? இத்தனை இளம் வயதில் இவ்வளவு உயரத்தை எட்டிப் பிடித்தது எப்படி என்பதை பார்ப்போம்.

மதுரை மாவட்டத்தில் கிராமத்தில் பிறந்த அமுதாவின் பெற்றோர் இருவரும் மத்திய அரசு ஊழியர்கள். இவரது தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. தாத்தாவின் மறைவுக்குப் பின்னர் ஒருமுறை பாட்டியுடன் ஓய்வூதியம் வாங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார் அமுதா. அப்போது அங்கு வந்த ஒருவரை பார்த்து எல்லோரும் வணக்கம் சொல்லி இருக்கிறார்கள். உடனே தனது பாட்டியிடம் யார் பாட்டி இவர்? என்று கேட்க இவர்தான் கலெக்டர், இவர்தான் இந்த ஊருக்கு ராஜா மாதிரி என்று சொல்லியிருக்கிறார் பாட்டி.

13 வயதில் பாட்டி சொன்ன அந்த வார்த்தைதான் தானும் ஒரு கலெக்டர் ஆக வேண்டும் என்ற விதையை அமுதாவின் மனதில் விதைத்துள்ளது. பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் மதுரை வேளாண் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். அதன்பின்னர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று ஐபிஎஸ் ஆனார்.

ஆனால் கலெக்டர் ஆகியே தீர வேண்டும் என்ற கனவுடன் இருந்ததால் மீண்டும் தேர்வெழுதி 1994-இல் ஐ.ஏ.எஸ் என்ற மூன்றெழுத்தை தன்வசமாக்கிக் கொண்டார்.

அமுதா முதன்முதலில் கடலூர் சப் கலெக்டராக தன் பணியை ஆரம்பித்தவர். அதன் பின்னர் தர்மபுரி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார். பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட மகளிர் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

அடுத்தடுத்து உணவு பாதுகாப்பு துறை இயக்குனர், மகளிர் மேம்பாடு கழக இயக்குனர் என பல பதவிகளை அலங்கரித்துள்ளார். தமிழின் மீது இவருக்கு பற்று அதிகம். ஈரோடு கூடுதல் கலெக்டராக இவர் இருந்தபோது அங்கு நடைபெற்ற ஒரு விழாவில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டார்.

அந்த விழாவில் நன்றியுரை பேசும்போது, அமுதா தமிழை கவிதையாகவே வாசித்துள்ளார். இதைப்பார்த்த கலைஞர்,"தமிழ் மீது உங்களுக்கு அவ்வளவு நாட்டமா?கவிதையெல்லாம் எழுதுகிறீர்கள் தொடர்ந்து எழுதுங்கள்"என்று மேடையிலேயே பாராட்டியுள்ளார்.

பின்னர்  அரசு செலவில் லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார். அந்த அடிப்படையில்தான் சென்னை பெரு வெள்ளத்தில் தத்தளித்த போது சிறப்பு அதிகாரியாக அமுதா சிறப்பாக பணியாற்றினார்.

இதற்கு அடிப்படை காரணமாக அமைந்திருந்தது இவரது முதுகலைப் படிப்பு தான். இவரது அண்ணன் இவருக்கு முன்பே ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற்று தற்போது ஐ.எப்.எஸ் அதிகாரியாக இருந்து வருகிறார். அமுதாவின் கணவர் ஷம்பு கலோலிகர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது தமிழக கதர் மற்றும் கைவினைப் பொருட்கள் துறையின் இணைச் செயலாளராக இருந்து வருகிறார்.

இளையராஜா பாடல்கள் என்றால் அமுதாவுக்கு அதிக விருப்பம். அவ்வப்போது வனப்பகுதிக்குள் சென்று இயற்கையையும் வனவிலங்குகளையும் போட்டோ எடுப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குறைந்தபட்சம் 30 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவது இவரது வழக்கமான பழக்கம். அப்துல் கலாம், ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய மூன்று ஆளுமைகள் மறைந்த போது அவர்களின் இறுதிச் சடங்கை எந்த குறைபாடும் இல்லாமல் மிக விரைவாகவும், நேர்த்தியாகவும் செய்து முடித்தவர்.

மேலும் படிக்க...

பிரதமர் அலுவலக இணைச்செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா., ஐ.ஏ.எஸ் நியமனம்..

அமுதா ஐஏஎஸ். இதுவே மத்திய அரசின் பார்வை இவர் மீது விழுவதற்கு மிக முக்கியமான காரணம்.எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் கொடுக்கப்பட்ட பணிகளை மிகச் சிறப்பாக செய்வதால் டெல்லியின் கவனம் இவர் மீது விழுந்துள்ளது. அந்த அடிப்படையில் தான் தற்போது பிரதமர் அலுவலக இணை இயக்குனராக தமிழகத்தில் இருந்து ஒரு பெண்மணி இடம் பெற்றிருக்கிறார். 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Office, Pm

அடுத்த செய்தி