பாரதியாரின் 141வது பிறந்த தினத்தையொட்டி, வாரணாசியில் பாரதி நினைவில்லத்தை முதலமைச்சர் திறந்துவைத்தார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர வேட்கையை தன் எழுச்சி கவிதைகள் மூலம் தூண்டிய முண்டாசு கவிஞர் பாரதியாரின் 141வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவர் பிறந்த எட்டயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் வரணாசியில் பாரதியார் வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசு சார்பில் புனரமைக்கப்பட்ட நிலையில், அதனை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பாரதியாரின் மார்பளவு சிலையை திறந்து வைத்த முதலமைச்சர், பாரதியார் நினைவு நூற்றாண்டு மலரையும் வெளியிட்டார். வாரணாசியில் நடந்த நிகழ்வில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பங்கேற்றார்.
இதேபோன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் பாரதியார் உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், சுதந்திரத்துக்காக மட்டும் இன்றி, ஒருங்கிணைந்த பாரதத்தை வலியுறுத்தியும் பாரதியார் பாடல்கள் எழுதியதாக தெரிவித்தார். இந்தியா ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவானது என கூறிய ஆளுநர், ரிஷிகளும் முனிகளும் கவிஞர்கள் என்று தெரிவித்தார்.
காசியில் பாரதியார் வாழ்ந்த இல்லத்துக்கு சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு, பாரதியின் மருமகன் உறவுமுறை கொண்ட கே.வி.கிருஷ்ணன் உள்ளிட்டோரை சந்தித்து ஆசி பெற்ற ஜெய்சங்கர், பின்னர் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
முன்னதாக, சென்னை மெரினா கடற்கரை அருகே காமராசர் சாலையில் உள்ள பாரதியாரின் சிலைக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் வேலு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Mahakavi Bharathiyar