அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது... உச்ச நீதிமன்றம் வரை செல்வேன் - சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
    ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற, சட்டத்தின் வாயிலாக 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகவும், தேவைபட்டால் உச்ச நீதிமன்றம் வரை செல்வேன் எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 58 கோவில்களில் 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு, ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற, சட்டத்தின் படி, பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்ட மசோதா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 51 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது. எனினும், வழக்குகள் காரணமாக அதை நிறைவேற்ற முடியாமல் இருந்தது. அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த சிரமங்களுக்கு இடையேதான் முதலமைச்சராகி இருக்கிறார். தி.க. ஆட்களின் பிடியில் சிக்கி, தவறான செயல்பாடுகளை, அரசு அதிகாரத்தின் வாயிலாக செய்கிறார். சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார்.

    ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அந்தப் பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் தலையிட்டேன். ‘சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன், ஆட்சியைக் கலைப்பேன்’ என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார். திடீரென, தி.க. சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கி இருக்கிறார்.

    ஓதுவார் பணி நியமன ஆணை


    திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இதை போற்றி மகிழ்கின்றனர். ‘51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.,வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார்’ என்று, தி.க.வினர் சொல்லி மகிழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தின்படி தான் இந்து அறநிலைய சட்டம் - 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55-ன் படி, அறநிலையத் துறை கோவில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்கு தான் அதிகாரம்.

    கோவிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே இருக்கிறது. அப்படி இருக்கும் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை மு.க.ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம். முதலமைச்சர் என்பதால், அவர் இஷ்டத்துக்கு செய்ய முடியாது.

    இப்படித்தான் சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீட்ஷிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். பின்னர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன். இறுதியில், நடராஜர் கோவிலை தீட்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது பல நுாற்றாண்டுகளாக, தீட்ஷிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது, அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

    அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற அரசின் முடிவு தவறானது. அதனால், ஏற்கனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, முதல் கட்டமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன். தேவையானால், உச்ச நீதிமன்றம் வரை செல்வேன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆகவே, இந்த உத்தரவை உடனடியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘வாபஸ்’ பெற வேண்டும். இல்லையென்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை மு.க.ஸ்டாலின் மதிக்காமல், இந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார். அதை தடுக்கவே போராடுகிறேன். இதை புரிந்து கொண்டு, மு.க.ஸ்டாலின் வாபஸ் பெற்றால் நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார். என்று சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
    Published by:Suresh V
    First published: