தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது... சசிகலாவின் கதை முடிந்து விட்டது - சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன், அதே போன்று அவரும் அரசியலுக்கு வரவில்லை...

 • Share this:
  தமிழகத்தில் தேசிய கட்சி மாநில கட்சியிடம் பிச்சை எடுத்து 10, 20 தொகுதிகளை கேட்டுப் பெற்று இருப்பது எனக்கு பிடிக்கவில்லை என்றும், பாஜகவினர் இதில் 2 அல்லது 3 தொகுதிகளில் வெற்றி பெறுவார்களா அல்லது ஒன்றில் கூட வெற்றி பெற மாட்டார்களா என்று தெரியவில்லை எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

  இது குறித்து செய்தியாளர்களுக்கு திருப்பதியில் பேட்டியளித்த சுப்ரமணிய சுவாமி “திருமலை திருப்பதி தேவஸ்தான வெப்சைட்டில் தனிப்பட்ட மதம் குறித்து குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிய வந்தால் அது குறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் கேட்டு விளக்கம் பெற வேண்டும்.

  அவ்வாறு செய்யாமல் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அரசியல் பின்புலம் இருப்பதன் காரணமாக செய்தி வெளியிட்டதோடு எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்து வருகிறது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் மீது 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதே வழக்கில் நான் இன்று திருப்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். கட்டாயம் இதில் வெற்றி பெறுவேன்.

  தமிழக அரசியலில் தேசிய கட்சியான பாஜக அனைத்து இடங்களிலும், வெற்றியோ தோல்வியோ தனித்து போட்டியிட்டு இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மாநில கட்சியிடம் பிச்சை எடுப்பது போன்று 10 முதல் 20 சீட்டுகளை கேட்டுப் பெற்று உள்ளனர். இதில் 2 அல்லது 3 தொகுதிகளில் வெற்றி பெறுவார்களா அல்லது ஒன்றில் கூட வெற்றி பெற மாட்டார்களா என்று தெரியாது.

  அகில இந்திய கட்சி பிச்சை வாங்கி போட்டியிடுவது எனக்கு பிடிக்கவில்லை. எனவே தமிழக அரசியல் குறித்து நான் எந்தவித ஆர்வமும் செலுத்தவில்லை. சசிகலாவின் கதை முடிந்து விட்டது. அரசியலை விட்டு விலகுவதாக அவரே அறிவித்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அதே போன்று அவரும் அரசியலுக்கு வரவில்லை. என்று கூறிய சுப்பிரமணியன் சுவாமி, ‘கமல் யார் அவரும் அரசியலுக்கு வந்துள்ளாரா’ என்று அப்போது கிண்டல் செய்தார்.

  திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் கிறிஸ்தவமத பிரச்சாரம் செய்யப்பட்டு இருப்பதாக தெலுங்கு பத்திரிக்கை மற்றும் ஒரு தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பி இருந்தது. இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அந்த தெலுங்கு பத்திரிக்கை, தொலைக்காட்சி ஆகியவற்றின் மீது நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தது.

  Must Read : தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 75% சொந்த மாநிலத்தவர்களுக்குத்தான்: ஹரியானா பாஜக அரசின் முடிவுக்கு ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு

   

  இந்த வழக்கில் சுப்ரமணிய சுவாமி தரப்பில் ஆறு மாதத்திற்கு முன்பு அந்தச் செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கியிருந்த நிலையில், எந்த வித பதிலும் அந்நிறுவனம் வழங்கவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து திருப்பதி நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழக்கு தொடர இன்று வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: