எஸ்பிஐ வங்கியின் பணியிடம் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கர்ப்பணி பெண்கள் தொடர்பாக இடம்பெற்றிருந்த குறிப்புகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தனது சுற்றறிக்கையை அவ்வங்கி திரும்பப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை பாலின சமத்துவதற்கு கிடைத்த வெற்றி என
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
எஸ்பிஐ பணிவாய்ப்பு தொடர்பாக சுற்றிக்கை வெளியிடப்பட்டது. அதில், மகளிர் கருவுற்ற காலத்தில் பணி நியமனத் தேர்வு பட்டியலில் இடம் பெற்று இருந்தாலும் அவர்கள் கருவுற்ற காலத்தில் 3 மாதங்களை எட்டி இருந்தால் அவர்களுக்கு பணி நியமனம் தரப்படாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான சு.வெங்கடேசன், மத்திய நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், ஸ்டேட் வங்கி 250000 ஊழியர்களை கொண்ட, அதில் 62000 மகளிர் ஊழியர்களை கொண்ட பெரிய அரசு வங்கி. வங்கித் துறையில் இவ்வளவு அதிகமாக வேலை வாய்ப்பு தருகிற இன்னொரு வங்கி கிடையாது. ஆனால் இவ்வளவு பெரிய வங்கி பாலின நிகர் நிலைப் பார்வையில் இவ்வளவு சுருங்கி இருப்பது வேதனை அளிக்கிறது.
மகளிர் கருவுற்ற காலத்தில் பணி நியமனத் தேர்வு பட்டியலில் இடம் பெற்று இருந்தாலும் அவர்கள் கருவுற்ற காலத்தில் 3 மாதங்களை எட்டி இருந்தால் அவர்களுக்கு பணி நியமனம் தரப்படாது. அவர்கள் "தற்காலிகமாக தகுதி அற்றவர்கள்". அவர்கள் "பிரசவத்திற்கு பின்னர் 4 மாதம் கழித்து பணியில் சேர அனுமதிக்கப்படுவார்கள்". என்ன அர்த்தம்? பெண்கள் 3 மாத கருவுற்ற காலத்தைக் கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் வங்கி பணி நியமனத்திற்கான எல்லா தேர்ச்சியை பெற்றிருந்தாலும் குறைந்த பட்சம் 7 மாதங்கள் காத்திருக்க வேண்டும். என்ன அநீதி!
இதையும் படிங்க: மாநகராட்சி உதவி பொறியாளர் மீது தாக்குதல்-திமுக எம்எல்ஏ சங்கர் மீது காவல்துறையில் புகார்
இது உளவியல் ரீதியாக பெண்களை பாதிக்காதா? அதுவும் கருவுற்ற காலத்தில் அமைதியான மன நிலையை உறுதி செய்ய வேண்டியது முக்கியமில்லையா? சிலருக்கு உடனடி வேலை வாய்ப்பு என்பது அவர்களின் வாழ்க்கையை நகர்த்துவதற்கான முக்கியத் தேவை என்ற நிலை இருக்கலாம். அரசு நிறுவனங்கள் எனில் "மாதிரி பணி அமர்த்துபவர்" (Model Employer) ஆக இருக்க வேண்டாமா?
கருவுற்ற பெண்கள் வந்தால் பேருந்தில் கூட எழுந்து நின்று இடம் தருகிற பண்பாடு கொண்ட இந்தியச் சமுகத்தில் அவர்களுக்கான இடத்தைப் பறிக்கிற ஸ்டேட் வங்கியின் நிர்வாகத்தை என்ன சொல்வது? இந்திய அரசியல் சாசன பிரிவுகள் 14,15,16 உறுதி செய்கிற சமத்துவத்திற்கு விரோதமானது. வேலை வாய்ப்பில் பாலின பாரபட்சம் கூடாது என்கிற 16 (2) பிரிவை அப்பட்டமாக மீறுவது.
மேலும் படிக்க: இது நாகலாந்து அல்ல தமிழகம்... ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு திமுகவின் முரசொலி விமர்சனம்
நவீன சமூகத்தின் சமத்துவ சிந்தனைகளை, பாலின நிகர் நிலைப் பார்வையை உள் வாங்கி ஒரு அரசு நிறுவனமே செயல்படவில்லை என்றால் தனியார் துறையில் பெண்களின் நிலை என்னவாகும்’ என்று கேள்வி எழுப்பியதோடு எஸ்பிஐ சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்ததை தொடர்ந்து, வேலைவாய்ப்பு தொடர்பான சுற்றறிக்கையை எஸ்பிஐ வங்கி திரும்ப பெற்றுள்ளது. இதனை வரவேற்றுள்ள சு.வெங்கடேசன், பாலின சமத்துவத்திற்கு கிடைத்த வெற்றி கருவுற்ற மகளிருக்கு பணி நியமனம் மறுக்கும் சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது பாரத ஸ்டேட் வங்கி பாலின நிகர் நிலைப் பார்வையோடு குரல் கொடுத்த எல்லோருக்கும் பாராட்டும், நன்றியும்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.