மதுரையிலே எய்ம்ஸ்(AIIMS) அறிவிக்கப்பட்டு ஒரு செங்கலோடு நிற்கிறது இரண்டாவது செங்கலுக்கு இத்தனை ஆண்டுகள் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். அதேபோல நிப்பர் (NIPER) மாறிவிடக் கூடாது என்று மக்களவையில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தி பேசினார்.
மக்களவையில் தேசிய மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் தொடர்பான மசோதாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் பேசினார். அப்போது அவர், NIPER தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் சம்பந்தப்பட்ட இந்த மசோதாவில் முதலிலே என்னுடைய அதிர்ச்சியை இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.
இன்றைக்கு மாமேதை அம்பேத்கரின் நினைவு நாள். நாடே அவருடைய பங்களிப்பை போற்றிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் NIPER கவுன்சிலில் எஸ்,எஸ்டி பிரிவினருக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் நிலைக்குழுவினுடைய பரிந்துரையை ஏற்க மறுத்து தலித் மற்றும் பழங்குடியினருக்கான இடத்தை இந்த மசோதா உறுதிபடுத்தவில்லை என்பது கடும் அதிர்ச்சியை உருவாக்குகிறது. அப்படியென்றால் நாடாளுமன்ற நிலைக்குழு எதற்கு கூட்டப்படுகிறது. அதன் கருத்துக்கு என்ன மரியாதை வழங்கப்படுகிறது என்பதை இந்த நேரத்திலே பதிவு செய்கிறேன்.
அதேபோல எல்லா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களிலும் அறிவின் பெயரைச் சொல்லி இடஒதுக்கீட்டை மறுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது இந்த அரசு. அதையே இந்த மசோதாவிலும் செய்திருக்கிறது. அதேபோல சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அடித்தட்டு மாணவர்களின் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட விசயங்களைப் பற்றி இந்த மசோதா பேச மறுக்கிறது. இவைகள் எல்லாம் ஒரு உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் சமூகநீதியை உறுதிப்படுத்துவதிலே இருந்து தவறுகிற ஒரு செயல் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.
இதையும் படிங்க: தமிழகத்தில் பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - தகவல்
அதேபோல மத்திய அரசு மீண்டும் மீண்டும் பழம்பெருமையை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். புராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்று சொல்வார்கள். பழம்பெருமை என்பது வேறு. நம்முடைய மரபு என்பது வேறு. மரபுக்கும் பெருமைக்கும் வித்தியாசம் இருக்கிறது. கால் நீட்டி உட்கார்ந்து பழைய கதையை பேசிக் கொண்டிருப்பது பழம்பெருமை. பெருமை மக்கும். ஆனால் மரபு மக்காது. அது புதிய தலைமுறைக்கு புதிய அறிவைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
இந்திய மருத்துவம் , குறிப்பாக தமிழ் மருத்துவம் , சித்த மருத்துவத்தைப் பற்றி அவற்றினுடைய ஆய்வுகள் பற்றி நம்முடைய இந்திய மருத்துவத்தை வளர்ப்பதற்கான எந்தவொரு ஏற்பாடும் வழிமுறையும் இதிலே இல்லை. மிக முக்கியமாக தமிழ் மருத்துவத்தைப் பற்றி சித்த மருத்துவத்தைப் பற்றிச் சொன்னால் எட்டாயிரம் மூலிகைகளுக்கு மேல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மகத்தான மருத்துவ அறிவை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தவர்கள்.
உடல் வளர்த்தேன் ; உயிர் வளர்த்தேன் என்று உடலை மையப்படுத்திய ஒரு அறிவியல் தத்துவம் . தாவரங்களிலே துவங்கி தாதுக்கள் கனிமங்கள் வரை மருத்துவத்திற்கு பயன்படுத்திய முதல் மருத்துவ மரபு தமிழ் மருத்துவ மரபான சித்த மருத்துவ மரபு என்பதை நான் இங்கு பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த தேசிய மருந்துசார் கல்வி ஆராய்ச்சிக் கழகம் இந்திய மருத்துவத்தை பேச மறுக்கிறது. தமிழ் மருத்துவத்தை பேச மறுக்கிறது.
மேலும் படிக்க: இறந்துபோனவருக்கு வருமான சான்றிதழ் வழங்கிய வருவாய்துறை; மகளின் திருமண உதவி தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் தாய்
இன்றைக்கு சர்க்கரை நோயாளிகளின் தலைமையகமாக இந்தியாவை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதற்கு நம்முடைய மருத்துவ மரபிலே இருந்து எதைக் கண்டுபிடித்து இருக்கிறோம் என்பது ஒரு பெரிய கேள்வி. மேக் இன் இந்தியாவைப் (Make in India) பற்றி பிரதமர் அடிக்கடி பேசுகிறார். திங் இன் இந்தியா (Think in India) மிக முக்கியமானது. நம்முடைய சிந்தனை மரபு மிக முக்கியமானது. கடந்த 10 ஆண்டுகளில் NIPER மூலமாக வெறும் 40 கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு காப்புரிமை உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்திய மரபிலே பல்லாயிரம் நோய் கூறு பற்றிய குறிப்பும், அதற்கான மருத்துவ மேற்கோளும் இருக்கிறது என்பதை இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.
அதேபோல மிக முக்கியமாக 2011 ஆம் ஆண்டு நம்முடைய 8 வது நிதிக்குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டு 8 NIPER கள் உறுதிபடுத்தப்பட்டது. அந்த 8 NIPER களில் ஒன்று தமிழகத்தில் மதுரையில் அமையும் என்று அன்றைய ஒன்றிய அமைச்சரவையும் உறுதிபடுத்துயது. ஆனால் இந்த 8 NIPER களில் 7 NIPER கள் உடனடியாக துவங்கப்பட்டது. எட்டாவது நிதிக்கமிசனிலும் அன்றைய அமைச்சரவையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதுரை NIPER க்கு மட்டும் எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஏறக்குறைய 12 ஆண்டுகளாக இன்றைக்கு வரை எதுவும் நிகழவில்லை.
NIPER க்கு 100 ஏக்கர் நிலம் தர வேண்டும் . எந்த மாநில அரசும் 100 ஏக்கர் நிலம் தரவில்லை. தமிழக அரசு மட்டும் தான் மதுரையில் திருமோகூரில் 116 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தது. கொடுத்து எட்டாண்டுகள் ஆகிவிட்டது. இன்றைக்கு வரை NIPER துவக்கப்படவில்லை.
மதுரையிலே AIIMS அறிவிக்கப்பட்டு ஒரு செங்கலோடு நிற்கிறது இரண்டாவது செங்கலுக்கு இத்தனை ஆண்டுகள் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். அதேபோல NIPER மாறிவிடக் கூடாது. நாடாளுமன்றத்தினுடைய நிலைக்குழு பரிந்துரைத்து இருக்கிறது மதுரை NIPER உள்ளிட்ட ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட NIPER கள் துவக்கப்பட வேண்டும். வெறும் கையால் முழம் போட்டு பிரயோஜனம் இல்லை.
இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தமிழகத்தினுடைய மருத்துவ சார் அறிவு வளர்ச்சிக்கு சித்த மருத்துவம் என்ற தமிழ் மருத்துவ வளர்ச்சிக்கு இந்திய மருத்துவத்தின் வளர்ச்சிக்கு ஆய்விற்கு மதுரை NIPER மிக அடிப்படையானது. மதுரையில் ஒரு தேசிய கல்வி நிறுவனம் கூட இல்லை. எனவே மதுரையில் NIPER உடனடியாக துவங்கப்பட வேண்டும் என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aiims Madurai, Madurai, Su venkatesan