ஊரக பணியாளர்களுக்கு இரண்டரை மாதங்களாக நிலுவையில் இருந்த கூலித்தொகையை வழங்கியதற்கு மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவருடைய அறிக்கையில், ”தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு கூலித்தொகை இரண்டரை மாதங்களாக வழங்கப்படவில்லை. ஜனவரி 13-இல் இருந்து அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி பாக்கி ரூ.671 கோடி; பொருளாகத் தர வேண்டிய பாக்கி ரூ.300 கோடி. மொத்தம் சுமார் 1000 கோடி. இந்தத் தொகையை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் எனக் கேட்டு கடந்த வாரம் மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர சிங் தோமர் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
நெருக்கடி மிக்க இக்காலத்தில் உடனடியாகச் செயல்பட்டு கிராமப்புற மக்களுக்கான நியாயத்தை வழங்குங்கள் என்று கேட்டிருந்தேன். இந்நிலையில், நேற்றைய தினம் அதற்கான தொகையை விடுவித்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
வரும் ஜூலை மாதம் வரையிலான கூலித்தொகையைக் கணக்கிட்டு தமிழகத்துக்கு 1995 கோடியே 77 லட்சத்து தொண்ணூராயிரம் ரூபாய் தரப்பட்டுள்ளது. இதற்காக மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர சிங் தோமர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் ஜனவரியில் இருந்து மக்கள் பணியாற்றிய காலத்திற்கான பொருட்களும் தாமதமின்றி வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு இக்கூலித்தொகை எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பிவைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.