நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு தடுப்பூசியினை சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்த சு.வெங்கடேசன் எம்.பி. அதற்கு பதில் கடிதம் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் அவர்களுக்கு கடந்த 13 ஆம் தேதி நான் கடிதம் ஒன்று எழுதியிருந்தேன். அதற்க்கு சுகாதாரத் செயலாளர் இப்பொழுது பதில் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
எனது கடிதத்தில், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 30,000 இளைஞர்களை கோவிட் எதிர்ப்பு களத்தில் தன்னார்வ தொண்டர்களாக ஈடுபடுத்த திட்டமிட்டிருப்பதையும், அவர்களுக்கு களத்திற்கு செல்ல ஏதுவாக தடுப்பூசி போடுவதற்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 1 கோடியை ஒதுக்குவதாகவும், அதற்கான தடுப்பூசிகளை அளித்து உதவுமாறும் கோரியிருந்தேன்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த தொடர்ந்த முன் முயற்சிகள், 24×7 களத்தில் இருந்து தாமதமின்றி பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனை அனுமதி, ஆக்சிஜன் அளிப்பு, மருந்து கிடைத்தல், ஆகியனவற்றை உறுதி செய்தல் போன்ற பணிகளில் நான் ஈடுபட்டு வருவதை எல்லோரும் அறிவர். மத்திய சுகாதார செயலாளர் கடிதமும் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் கோவிட் எதிர்ப்பு களத்தில் நாங்கள் ஆற்றுகிற பணியையும், அளிக்கிற ஒத்துழைப்பையும் பாராட்டியே துவங்கியுள்ளது.
இந்த கள அனுபவத்தில் இருந்தே அனுபவம் மிக்க பலரையும் கலந்தாலோசித்து "சமூக பங்கேற்பை" (Community Participation) உறுதி செய்கிற வகையில்தான் ஓர் நேர்த்தியான திட்டமிடலை முன் வைத்தேன். குடியிருப்பு பகுதியில் முதியோர் பராமரிப்பு, கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ளவர்களுக்கு உதவி, அவசர மருத்துவ தேவைகளுக்கு வாகனம், தனிமைப் படுத்தப் பட்டவர்க்கு உணவு ஏற்பாடு போன்றவற்றிற்கு இந்த தன்னார்வ இளைஞர்கள் பெரும் பங்களிப்பை தர இயலும். இளைஞர்களின் ஆற்றல் நேர் மறையாக பயன்படும். இவ்வளவு கனவுகளோடு முன் வைக்கப்பட்ட திட்டத்திற்கு சுகாதாரத் துறைச் செயலாளர் தந்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியை தருகிறது.
"விலை தாராளமயம் மற்றும் கோவிட்-19 தேசிய தடுப்பூசி பரவல் திட்டத்தை" குறிப்பிட்டு நேரடியாக தடுப்பூசியை தர இயலாது என தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கும், தனியார் மருத்துவ மனைகளுக்குமே தருவதற்கே அக் கொள்கையில் வழி வகை உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு வகுத்துள்ள தடுப்பூசி கொள்கையை அதன் விலை நிர்ணய முறையை அடிப்படையிலேயே நாங்கள் ஏற்கவில்லை. மூன்று விலை, மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமை, தனியார்களின் நேரடி கொள்முதல் ஆகியனவெல்லாம் ஒரு பேரிடர் காலத்தில் மக்கள் நலன் நாடும் அரசாங்கம் செய்யத் தக்க செயல்கள் அல்ல.
எல்லோருக்கும் இலவச தடுப்பூசி, காப்புரிமை சட்டத்தில் இருந்து விலக்கு, உற்பத்தியை 'கட்டாய உரிமம்' வாயிலாக விரிவு படுத்துவது, பட்ஜெட் ஒதுக்கீடான ரூ 35,000 கோடியை முழுமையாக பயன்படுத்துவது, பி.எம்.கேர் நிதியை திருப்பி விடுவது உள்ளிட்ட பல கருத்துக்களை நானும், எனது கட்சியும், எதிர்க்கட்சிகளும், நிபுணர்களும் முன் வைத்து வருகிறோம். ஆனால் அதற்கெல்லாம் உரிய நடவடிக்கை இல்லை. மக்களின் உயிர் வாதை உலுக்குகிற வேளையில் கூட உலக மயப் பாதையை விட்டு விலக மாட்டேன் என்கிற அரசின் நிலைப்பாடு ஆழ்ந்த வேதனை தருகிறது.
நிரந்தர நீண்ட காலத் தீர்வுகளுக்கும் அரசின் கதவுகளும், காதுகளும் திறக்காது. உடனடி களத் தேவைகளுக்கும் திறக்காது என்றால் என்ன செய்வது? மதுரை கோவிட் எதிர்ப்பு களத்திற்கு நான் முன் மொழிந்துள்ள திட்டம் தடுப்பூசி கொள்கையையும் கடந்தது. விரிந்த வியூகத்தின் ஒரு பகுதி. நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் முன் மாதிரியாய் அமலாக்கி பிற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யலாம் என்ற திறந்த மனதோடு அணுகப்பட வேண்டிய ஆலோசனை.
Must Read : அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு இதய சிகிச்சை அளித்த எம்.எல்.ஏ.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியும் மத்திய அரசு நிதியின் ஒரு பகுதிதான் என்ற எளிய உண்மையைக் கூட மேற்கண்ட கடிதம் கணக்கிற் கொள்ளவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. தனியார்கள் கூட நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு தடுப்பூசியினை சிறப்பு ஒதுக்கீடு செய்ய மாட்டோம் என்பதை போன்ற மக்கள் விரோத செயல் வேறெதுவுமில்லை. உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். கொள்கையில் மாற்றம் கொண்டு வாருங்கள். நல்ல முடிவை நானும் எனது தொகுதி மக்களும் எதிர் பார்க்கிறோம்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, CoronaVirus, Covid-19 vaccine, Su venkatesan