மதுரை -
தேனி ரயில் நிலையங்கள் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில் பாதை மே 26 அன்று பிரதமர்
மோடியால்
சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக மாலை 06.30 மணிக்கு தொடங்கிவைக்கப்படவுள்ளது. அதே தினம் புதிய ரயில் சேவையும் துவக்கப்பட உள்ளது. பின்பு மே 27 முதல் இந்த பிரிவில் வழக்கமான ரயில் சேவை துவங்க உள்ளது.
அதன்படி மதுரை - தேனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 08.30 மணிக்கு புறப்பட்டு காலை 09.35 மணிக்கு தேனி சென்று சேரும். மறு மார்க்கத்தில் தேனி - மதுரை முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் தேனியில் இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்பட்டு இரவு 07.35 மணிக்கு மதுரை வந்து சேரும்.
இந்த ரயில்கள் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு பொது மற்றும் சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி இணைக்கப்படும்.
இந்த ரயில்சேவை குறித்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ட்விட்டர் பதிவில், ‘மிகக்குறுகிய தூரத்தை மிக அதிக காலம் எடுத்துக் கொண்ட திட்டம் நிறைவடைந்தது. மதுரை தேனி பயணிகள் ரயில் வரும் 27 ஆம் தேதி முதல் இயங்கத் துவங்குகிறது. பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பின் இவ்வாண்டு தென்மேற்கு பருவக்காற்றோடு தேனிக்கு வந்து சேர்கிறது மதுரை ரயில்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.