ஊரடங்கு கால குற்றங்கள்: சென்னை உட்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆய்வு...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஆய்வு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யும் நடவடிக்கைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப்பெற்றுள்ளது.

  • Share this:
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதில் குடும்ப உறுப்பினர்களாலேயே குழந்தைகளின் எதிர் காலங்கள் சிதைக்கப்படும் அவலமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக கடந்த 06-03-2019 அன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டது.

இந்தப் பிரிவானது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல்கள், குடும்ப வன்முறை போன்ற பிரச்சனைகளை தடுப்பதற்கும், உடனுக்குடன் குற்றவாளிகளை கைது செய்வதற்கும் தீவிரமாக  செயல்பட்டு வருகிறது.

சென்னை : மார்ச் மாதம் முதல் ஆகஸ்டு 31 வரை

சென்னையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுப்பதற்கு சிறப்பு  நடவடிக்கைகள் எடுத்து தீவிர முனைப்புகாட்டி வருகிறார். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது சென்னையில் கொரோனா ஊரடங்கில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளது. மார்ச் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 162 புகார்கள் பதிவாகி உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு போக்சோ வழக்குகள் 69, பெண்களிடம் பாலியல் சீண்டல்கள் 151, வரதட்சணை கொடுமை 71, பாலியல் வன்கொடுமை 13 வழக்குகள் என 304 வழக்குகள் பதிவாகியிருந்தன.

அதேபோல 2018-ஆம் ஆண்டு போக்சோ வழக்குகள் 97, பெண்களிடம் பாலியல் சீண்டல்கள் 159, வரதட்சணை கொடுமை 39, பாலியல் வன்கொடுமை 15 வழக்குகள் என 310 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.2019 ஆம் ஆண்டில் 111 போக்சோ வழக்குகள், 126 பாலியல் சீண்டல்கள், 37 வரதட்சனை கொடுமை வழக்குகள், பாலியல் வன்கொடுமை 17 என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நடப்பு (2020) ஆண்டில் குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலமான மார்ச் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வரை சென்னையில் 97 போக்சோ வழக்குகளும், 38 பாலியல் சீண்டல் வழக்குகளும், 2 வரதட்சணை கொடுமை வழக்குகளும், 17 பாலியல் வன்கொடுமை வழக்குகள் என மொத்தம் 162 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அதேபோல பெண் கொடுமை புகார்களுக்காக தொடங்கப்பட்ட 1091 என்ற எண்ணுக்கு ஊரடங்கு காலத்தில் மட்டும் 156 புகார்கள் வந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு தொடங்கிய நாள் முதல் தற்போது வரை தமிழகம் முழுவதும் இந்த எண்ணுக்கு 26,578 புகார்கள் வந்துள்ளன.

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட 1098 என்ற எண்ணுக்கு போன் கால் மூலமாக ஊரடங்கு காலத்தில் சென்னை முழுவதும் 96 புகார்கள் வந்துள்ளன. அதேபோல ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் 737 புகார்கள் போன் கால் மூலமாக வந்துள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு தொடங்கிய நாள் முதல் தற்போது வரை இந்த எண்ணுக்கு சிறுவர்களுக்கு எதிரான 27,186 புகார்கள் வந்துள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண்ணான 9150250665 என்ற எண்ணுக்கு இந்த ஆண்டு மட்டும் சென்னையில் 5400 அழைப்புகள் வந்துள்ளன.

பாலியல் சீண்டல்கள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான புகாரில் மனதளவில் பாதிக்கப்பட்ட 32 பெண்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் 15 கவுன்சிலர்கள் கொண்டு மனநலம் சார்ந்து கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்களிடம் நேரடியாக 126 புகார்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளது. வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 42 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட 35 அம்மா பெட்ரோல் சிறப்பு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் சிறப்பு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசாரால் 25 ஆயிரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளது.

தேசிய மகளிர் ஆணையம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்ற தடுப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை காவல்துறையின் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார்களை பாராட்டி சான்றிதழ் அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை :

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை குடும்ப வன்முறையால் 7,372 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதேபோல மகளிர் காவல் நிலையங்கள் தாமாகவே முன்வந்து போன் மூலம் மற்றும் நேரடியாக வீட்டுக்கே சென்று 6150 குடும்ப வன்முறை புகார்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தமாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 13, 447 குடும்ப வன்முறை வழக்குகள் தமிழகம் முழுக்க பெறப்பட்டுள்ளன.இதில் 13, 372 புகார்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க..இந்தியாவில் மொத்தமாக 382.. கொரோனா தொற்றால் தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவர்கள் உயிரிழப்பு.. முழுவிவரம்..கொரோனா ஊரடங்கில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 1,424 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதற்கடுத்தபடியாக திருநெல்வேலி மாவட்டத்தில் 705 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் மார்ச் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை 365 போக்சோ வழக்குகள் பதிவாகி 372 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  தமிழகம் முழுவதும் இந்த காலகட்டத்தில் காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி மூலமாக 12,565 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யும் நடவடிக்கைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப்பெற்றுள்ளது.
Published by:Vaijayanthi S
First published: