ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பள்ளிக்கு தானே தடை.. டியுஷன் இருக்கே..! அடங்காத பள்ளி மாணவர்கள்.. கண்டிப்பு காட்டுமா காவல்துறை?

பள்ளிக்கு தானே தடை.. டியுஷன் இருக்கே..! அடங்காத பள்ளி மாணவர்கள்.. கண்டிப்பு காட்டுமா காவல்துறை?

மாதிரி படம்

மாதிரி படம்

Students Driving Bikes | அரசு பல வழிகளில் சட்டம் இயற்றி தடை போட்டாலும் பெற்றோர்களும் இதற்கு பொறுப்பெற்று தங்கள் பிள்ளைகளை வாகனங்கள் இயக்க அனுமதிக்கக் கூடாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய மோட்டார் வாகன சட்டப்படி 18 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே வாகனங்கள் ஓட்டுவதற்கான ஓட்டுனர் உரிமம் பெற முடியும். அதற்கு முன்னரே இருசக்கர வாகனங்களை ஓட்ட விரும்பினால் லைசென்ஸ் பெற்ற பெற்றோரின் பெயரில் உள்ள 50சிசி திறன் கொண்ட மோட்டார் வாகனத்தை பெற்றோரின் மேற்பார்வையில் ஓட்டலாம்.. அந்த உரிமம் பெறுவதற்கும் 16 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இதை மீறி மைனர்கள் வாகனங்கள் இயக்குவது குற்றமாகும். 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அதிலும் ஓட்டுனர் உரிமம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே வாகனம் இயக்க அனுமதி உள்ளது. பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு காரணகர்த்தாவாக ஓட்டுனர் உரிமம் பெறாதவர்கள் இருக்கின்றனர்.

தினந்தோறும் சாலை விபத்துக்களும், அவற்றில் உயிர் இழப்புகளும் தொடர்கதையாகி வரும் நிலையில், சமீப காலங்களில் 18 வயதை எட்டாத பள்ளி மாணவ, மாணவியர் இருசக்கர வாகனங்களில் பள்ளிகளுக்கு செல்வது நகரங்கள் மட்டுமல்லாது ஊரக பகுதிகளிலும் அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதுதவிர வரம்பு மீறும் வகையில் மாணவர்கள் பலர் பைக் ரேஸ்களில் ஈடுபடுவது வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது சாலையில் நடந்து செல்வோரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெற்றோருக்கு சிறை:

2019ம் ஆண்டு அமலான புதிய மோட்டார் வாகன திருத்த சட்டப்படி சிறார்கள் பைக் ஓட்டினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம், பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்க வழிவகை உள்ளது. கோவை ரத்தினபுரியில் 16 வயது சிறுவன் ஒருவன் ஸ்கூட்டி ரக இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற போது பேருந்து மீது மோதியதில் பின் சீட்டில் அமர்ந்திருந்த சிறுவன் உயிரிழந்தான். இந்த வழக்கில் வாகனத்தை ஓட்டிய சிறுவனின் தாயாருக்கு ஒரு நாள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் கடந்த மார்ச் மாதத்தில் பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் பள்ளிகளுக்கு மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தது. என்ன தான் தடை போட்டாலும், மாணவர்கள் பள்ளிகளுக்கு இருசக்கர வாகனங்களில் வருவது தடைபட்டதாக தெரியவில்லை.. பள்ளிகளுக்கு அருகாமையில் தனியார் பார்க்கிங்குகளில் பைக்குகளை நிறுத்திவிட்டு பள்ளி முடிந்த பின்னர் எடுத்துச் செல்லும் வழக்கத்திற்கு மாணவர்கள் பழகியுள்ளனர்.

டியூஷன்களுக்கு பைக்கில் வரும் மாணவர்கள்..

பள்ளிகளில் ஆசிரியர்களின் கண்டிப்புக்கு அஞ்சி கூட மாணவர்கள் இருசக்கர வாகனங்களை எடுத்து வருவதை குறைத்துக்கொண்டாலும், காலை, மாலை நேரங்களில் டியூஷன்களுக்கு இருசக்கர வாகனத்தை தடையேதும் இல்லாமல் எடுத்துச் செல்கின்றனர். டியூஷன் முடிந்த நேரங்களில், வாகன போக்குவரத்து நிறைந்த சாலைகளில் வீலிங் போன்ற சாகசங்களை செய்து தங்களுக்கும், தங்களால் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்.

அரசு பல வழிகளில் சட்டம் இயற்றி தடை போட்டாலும் பெற்றோர்களும் இதற்கு பொறுப்பெற்று தங்கள் பிள்ளைகளை வாகனங்கள் இயக்க அனுமதிக்கக் கூடாது. பலரும் தங்களின் பிள்ளைகள் வாகனங்களை இயக்குவதற்கு அனுமதியளிப்பது அந்த சிறுவர்கள் மட்டுமல்லாது பிறரின் உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அதே நேரத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் கண்டிப்புடன் நடப்பது போல டியூஷன்களில் ஆசிரியர்கள் கடுமை காட்ட இயலாது. அவர்களுக்கு வருமானமே பிரதானமாக அமையும்.

போக்குவரத்து பிரிவு காவல்துறையினரும் சிறுவர்கள் வாகனங்கள் இயக்குவதை தடை செய்ய தேவையான கண்டிப்பு நடவடிக்கைகளை எடுத்து உயிர் பலிகளை தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Published by:Arun
First published:

Tags: Bike, Tamil Nadu