முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நடுரோட்டில் மாணவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த காதலன்.. சென்னையில் கொடூரம்

நடுரோட்டில் மாணவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த காதலன்.. சென்னையில் கொடூரம்

சென்னையில் காதலியை, கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துள்ளார் காதலன். மேலும் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை தாம்பரம் அடுத்த கிறிஸ்தவ கல்லுாரி எதிரே, வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் ஒரு மாணவியும், இளைஞரும் நீண்ட நேரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது. வாக்குவாதத்தின் உச்சத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். அறுத்த வேகத்தில் கழுத்தில் நரம்புகள் துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் அந்தப் பெண் விழுந்து இறந்தார்.

அதேவேகத்தில் அந்த இளைஞரும் தன் கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்தக் கொடூரத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட மாணவி, குரோம்பேட்டை ராதாநகரைச் சேர்ந்த 21 வயதான சுவேதா என்பது தெரியவந்தது

மாநகர அரசு பேருந்து ஓட்டுநரான மதியழகன் என்பவரின் மகளான சுவேதா, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லுாரியில் லேப் டெக்னீஷியனுக்குப் படித்து வந்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு, சொந்த ஊரான திருச்சிக்கு சுவேதா ரயிலில் சென்றபோது, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருக்குவளை கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான ராமச்சந்திரன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போன் எண்ணைப் பரிமாறிக் கொண்டனர்; நட்பு காதலாக மாறியுள்ளது.

பிஈ பட்டதாரியான ராமச்சந்திரன், ஓராண்டுக்கு முன்பு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்; காதலியைப் பார்ப்பதற்கு வசதியாக மறைமலை நகரில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சுவேதாவின் பெற்றோருக்கு மகளின் காதல் தெரியவந்ததால் கண்டித்துள்ளனர். அதனால் பயந்துபோன, சுவேதா, கடந்த நான்கு மாதங்களாக காதலில் இருந்து விலகப் போவதாகவும் பிரேக் அப் செய்யப் போவதாகவும் ராமச்சந்திரனிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்ககும் இடையே அடிக்கடி சண்டையும் நடந்ததாகத் தெரிகிறது.

இதற்கிடையே தனக்கு கிடைக்காத காதலி வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று அவரைக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்ய திட்டமிட்ட ராமச்சந்திரன் கடைசியாக ஒருமுறை வியாழக்கிழமை சந்திக்கலாம் என்று கூறி அழைத்துள்ளார். அதை நம்பிய சுவேதாவும் நேரில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போதுதான் இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது என்கின்றனர் போலீசார்.

இந்த நிலையில் மாணவியின் உறவினர்கள் 100க்கும் மேற்ப்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் ஒன்று திரண்டு உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உடலை வாங்கமாடோம் என்று போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து, உடற்கூறாய்வு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு மாணவியின் உறவினர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்

First published:

Tags: Crime News, News On Instagram