• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வெளிச்சத்திற்கு வரும் மோசடிகள்... நகைக்கடன் தள்ளுபடிக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்

வெளிச்சத்திற்கு வரும் மோசடிகள்... நகைக்கடன் தள்ளுபடிக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்

தங்க நகை - மாதிரிப்படம்

தங்க நகை - மாதிரிப்படம்

நாமக்கல் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த விவகாரத்தில் 10 ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • Share this:
    நாமக்கல் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த விவகாரத்தில் 10 ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நகைக்கடன் தள்ளுபடிக்கு திமுக அரசு பல கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளதால், தங்களது கடன் தள்ளுபடியாகுமா என மக்கள் அச்சத்தில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதை பயன்படுத்தி முறைகேடாக பலருக்கு நகைக் கடன் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், நகைக் கடன் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு மட்டும் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது தெரியவந்தது. முதல்கட்ட விசாரணையில் கூட்டுறவு சங்க இயக்குநர் கிருஷ்ணசாமி, நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியானதும், தனக்கு தெரிந்தவர்களை அணுகி நகைக் கடன் பெறும்படி கூறியதும், அதில், பலர் தங்கம் முலாம் பூசப்பட்ட செம்பு தகடுகளை அடகு வைத்து கடன் பெற்றதும் தெரியவந்துள்ளது.

    நகைக் கடன் மோசடி வெளிச்சத்திற்கு வந்த நிலையில், கிருஷ்ணசாமி சம்பந்தபட்ட நபர்களை அழைத்து கடன் தொகையை வட்டியுடன் செலுத்தும்படி கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து போலி நகைகளை அடகு வைத்தவர்கள் உரிய தொகையை செலுத்திவிட்டு அடகு வைத்த பொருளை மீட்டுச் சென்றனர். கூட்டுறவு சங்கத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்ற நிலையில், அதில் 11 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

    அதைத் தொடர்ந்து, நகைக் கடன் மோசடி தொடர்பாக கூட்டுறவு சங்க இயக்குநர் கிருஷ்ணசாமி, எழுத்தர்கள் சரோ மணி, சுந்தரராஜ், சிவலிங்கம், சங்க உறுப்பினர்கள் 6 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன், மூன்று ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நகையே இல்லாமல் நகைக்கடன் என்ற பெயரில் 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தொடர்பாக அந்த வங்கியின் தலைவர் முருகேச பாண்டியன் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், நகை மதிப்பீட்டாளர் உட்பட 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். கூட்டுறவு சங்கங்களில் நகைகள் இன்றி கடன் வழங்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அனைவரது மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரித்துள்ளார்.

    இந்நிலையில், திருப்பத்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நகைக்கடன் தள்ளுபடிக்கு திமுக அரசு ஏகப்பட்ட கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளதால், தங்களது கடன் தள்ளுபடியாகுமா என மக்கள் அச்சத்தில் உள்ளதாக விமர்சித்துள்ளார்.

    தமிழகம் முழுதும் பல்வேறு கூட்டுறவு வங்கிகளிலும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளை கேரட் மீட்டர் கொண்டு ஆய்வு செய்தால் பலரின் குட்டுகள் வெளிப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: