கல்விக் காவலர்... மண்ணை நேசித்த விவசாயி... துளசி அய்யா வாண்டையார்!

துளசி அய்யா வாண்டையார்

அரசியலில், பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அய்யாவுடன் நெருங்கிப் பழகினர்.

  • Share this:
தமிழ்நாட்டின் நெற் களஞ்சியம் என்று சொல்லப்படும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று பூண்டி அ.வீரைய்யா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி.

இக்கல்லூரியின் தாளாளராக அரை நூற்றாண்டாக இருந்தவர் கி.துளசி அய்யா வாண்டையார். இவர்,சுதந்திர போராட்ட வீரர், காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் எம்.பி உள்ளிட்ட பல்வேறு  பதவிகளை வகித்தவர். காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் உள்ள குடும்பங்களின் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கியவர்.

ஆண்டிற்கு குறைந்தது ஆயிரம் பேருக்கு உணவு, உறைவிடம் தந்து இலவசக் கல்வி தந்தவர்.ஒரு பல்கலைக்கழகத்தின் கட்டமைப்போடு 750 ஏக்கர் பரப்பில் உள்ள இக்கல்லூரியில் படித்த பலர் தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர்.

மாணவர்களின் அட்மிஷனுக்கு மட்டுமல்ல, பேராசிரியர்கள் அப்பாயின்மெண்டுக்கும் துளி கூட நன்கொடை எனும் கட்டண வசூல் என்பது இங்கில்லை என்பது தொடரும் ஆச்சரியம்.
கல்லூரி கடைநிலை ஊழியர் தொடங்கி துறைத் தலைவர்கள் வரை அய்யா மீது  தனி மரியாதையாக இருந்தாலும் எப்போதும் மாணவர்களின் பக்கம் இருப்பவர். அவர்கள் மீது தனி அக்கறையும் கனிவும் கொண்டவர்.

கல்லூரி வளாகம், நூலகம், ஆய்வகம், விடுதி, கலை விழா என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்துவார். திடீரென வகுப்பிற்குள் வந்து மாணவர்கள் விரும்பும் பேராசிரியராக திகழ்வார். மாணவர்கள் பக்க நியாயங்களை உணர்ந்தவர். இதனால், கல்வித் தந்தை, கல்விக் காவலர் என்றும் உள்ளன்போடு எல்லோராலும் அய்யா என்றும் அழைக்கப்படுகிறார்.

அரசியலில், பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அய்யாவுடன் நெருங்கிப் பழகினர்.

தான் தேர்தலில் வேட்பாளராக நின்ற போதும், தனக்கு வாக்களியுங்கள் என்று கேட்காமல், "நல்லவர்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுங்கள்" என்று கம்பீரம் குறையாமல் பேசியவர். தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாட்டின் முதல் குடிமகனாக ஆர்.வெங்கட்ராமன் வருவதற்கு முக்கிய பங்காற்றியவர்.
தேசியப் பற்றும் தெய்வ பக்தியும் நிறைந்தவர். அரசியல், ஆன்மீக நூல்களை எழுதியுள்ளார். இவரைப்பற்றியும் பலர் எழுதியுள்ளனர்.

இப்படி, எவ்வளவோ சிறப்புகள் இருந்தாலும் தான் ஒரு விவசாயி  என்று பெருமிதமாக சொன்னவர். சொன்னதோடு நிற்காமல் தனக்கு சொந்தமான பல்லாயிரம் ஏக்கரில் நவீன சாகுபடியை, இயற்கை வேளாண்மையை நடைமுறைப்படுத்திக் காட்டியவர். தன்னை வணங்குவோரைக் கூட இந்த மண்ணை வணங்குங்க.. இது எல்லாம் தரும் என்று அறிவுறுத்தியவர்.

ஏர்ப் பிடித்த உழவர் குடி, எழுது கோல் பிடிக்க வேண்டும். எதனாலும் கல்வி தடைபடக் கூடாது. அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று இப்போதும் கல்வியை சேவையாக தொடர்ந்தவர். இன்று காலை (17ம் தேதி) தனது 94வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, அமமுக தலைவர் டிடிவி தினகரன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ராமதாஸ், மநீம தலைவர் கமல்ஹாசன்,  விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட  பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கொரோனா காலம், ஊரடங்கு என்றாலும் பல்வேறு கிராமங்களில் மக்கள் அய்யாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

*வையத்துள் வாழ் வாங்கு வாழ்பவர்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்*உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: