Home /News /tamil-nadu /

முடிவுபெறும் வடகிழக்குப் பருவமழை! நிரம்பாத ஏரிகள்; வரும் ஆண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?

முடிவுபெறும் வடகிழக்குப் பருவமழை! நிரம்பாத ஏரிகள்; வரும் ஆண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?

புழல் ஏரி

புழல் ஏரி

  • News18
  • Last Updated :
    வடகிழக்கு பருவமழை முடிவு பெறவுள்ள நிலையில் சென்னையின் நீராதாரமாக விளங்கும் ஏரிகளில் மொத்தக் கொள்ளளவில் பாதியை மட்டுமே எட்டியுள்ளன. அதனால், அடுத்த ஆண்டும் தண்ணீர் பற்றாக்குறையை சென்னை எதிர்கொள்ளுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால், சென்னையின் நீராதார ஏரிகளும், நிலத்தடி நீர் மட்டமும் வற்றிய நிலையில் சென்னை வரலாறு காணாத ஒரு தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டது. இவ்வாண்டு பெய்த தென்மேற்கு பருவமழை கொஞ்சம் கை கொடுத்த நிலையில், வடகிழக்கு பருவமழை இயல்பை விட 13 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரி


    வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், சென்னைக்கு 80 செமீ பெய்ய வேண்டிய மழை, தற்போது வரை 60 செமீ மட்டுமே பெய்துள்ளது. இந்த மழையால் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் பரவலாக 4 முதல் 5 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. இது ஒருபுறம் ஆறுதல் அளித்தாலும், சென்னையின் நீர்ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு 50 % சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

    3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 1,560 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 165 மில்லியன் கன அடி மட்டுமே உள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,252 மில்லியன் கன அடி மட்டுமே உள்ளது. 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 1,298 மில்லியன் கன அடி மட்டுமே உள்ளது.

    கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஏரியின் நீர் மட்டம் இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்து இருந்தாலும், சென்னையின் நீர் தேவையைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது மிகக் குறைவான அளவே. நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி. கடந்த ஆண்டு மொத்தம் 1,602 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு இருந்த நிலையில் இந்தாண்டு 5275 மில்லியன் கன அடி நீர் உள்ளது.

    இது ஒருபுறம் இருக்க, இந்த நான்கு ஏரிகளிலும் மொத்தமாக 1.9 டி.எம்.சி வண்டல் மண் தூர்வாரப்பட வேண்டும் என பொதுப்பணித்துறை தெரிவித்து இருந்தது.
    அதன்படி பார்த்தால், 5,275 மில்லியன் கன அடி நீர் முழுமையாக இருப்பதற்கு வாய்பில்லை என்று தெரிகிறது.

    ஆக, சென்னையின் நீர் தேவையை வைத்துப் பார்த்தால் இந்த நீர் இருப்பு 2020 ஏப்ரல் மாதம் வரை மட்டுமே கை கொடுக்கும் என்று தெரிகிறது. ஆந்திராவில் இருந்து பெறப்பட்டு வரும் கிருஷ்ணா நதி நீர் ஒருபுறம் நீர் பற்றாக்குறையை சமாளிக்கும். தற்போது உயர்ந்து வரும் நிலத்தடி நீர், கோடை காலத்தில் மிக குறையலாம்.

    எனவே எப்படி பார்த்தாலும் இந்த ஆண்டு அளவிற்கு இல்லாவிட்டாலும் 2020 ஆம் ஆண்டு கோடை காலத்தில் சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே தெரிகிறது. அடுத்த தென்மேற்கு பருவமழை வரை சென்னைக்கு தேவையான தண்ணீரை, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், நெய்வேலி சுரங்கம், விவசாய கிணறுகள் உள்ளிட்ட வழிகளின் மூலம் சமாளிக்க முடியும் என்று மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் தேரிவிக்கின்றனர்.

    இருந்தாலும், இந்த ஆண்டு பஞ்சத்தை சமாளிக்க வேலூரில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் பெறப்பட்டது. அந்த அளவிற்கு வீண் செலவுகளுக்கு இடம் அளிக்காமல் அரசு உடனடியாக மாற்று வழிகளில் நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும் என்பதே சென்னை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Also see:


     
    Published by:Karthick S
    First published:

    Tags: Water

    அடுத்த செய்தி