விவேக் உடல்நலக்குறைவுக்கு தடுப்பூசி காரணமல்ல; வதந்திகளை தவிர்ப்போம் - கமல்ஹாசன் வேண்டுகோள்

விவேக் உடல்நலக்குறைவுக்கு தடுப்பூசி காரணமல்ல; வதந்திகளை தவிர்ப்போம் - கமல்ஹாசன் வேண்டுகோள்

கமல்ஹாசன்

விவேக் உடல்நலக்குறைவுக்கு தடுப்பூசி காரணாமல்ல என மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பெருந்தொற்று காலத்தில் வதந்திகள் பரப்புவதை நிறுத்திவிட்டு அரசுடன் ஒத்துழைப்போம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனியார் மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்ட அவர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விவேக்கின் உடல்நிலை குறித்து சிம்ஸ் மருத்துவமனை அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, சுயநினைவு இல்லாத நிலையில் குடும்பத்தினரால் நடிகர் விவேக் இன்று காலை 11 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வல்லுனர்கள் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். தற்போதைக்கு அவரது உடல்நிலை மோசமாக தான் உள்ளது. உடல்நலக்குறைவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல. இது மாரடைப்பால் ஏற்பட்ட பிரச்னை என மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், விவேக் உடல்நலக்குறைவுக்கு தடுப்பூசி காரணாமல்ல என மருத்தவர்கள் தெரிவித்துள்ளதை மேற்கோள் காட்டி, இந்தப் பெருந்தொற்று காலத்தில் வதந்திகள் பரப்புவதை நிறுத்திவிட்டு அரசுடன் ஒத்துழைப்போம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.

  அவரது உடல் நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் தேவையற்ற அச்சம் கொள்வதை, வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தி விட்டு அரசுடன் ஒத்துழைப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: