உயிர்களை காக்கும் நோக்கில் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை பாஜக வேட்பாளர் குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மூச்சு விட முடியாமல் பரிதவித்துக் கொண்டுள்ளன. தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 2,000க்கும் மேற்பட்டோர் மரணத்தை தழுவுகின்றனர்.
கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து வருவதால் மருத்துவ ஆக்ஸிஜன் தேவை அதிகரித்தது. இதனிடையே திடீரென பல மாநிலங்களிலும் பரவலாக ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. போர்க்கால அடிப்படையில் மருத்துவ ஆக்ஸிஜனை நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன். எந்தெந்த நிறுவனங்களால் முடியுமோ அந்த நிறுவனங்களும் ஆக்ஸிஜன் உற்பத்தியில் ஈடுபட வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்டு கிடக்கும் ஸ்ரெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து வழங்க அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணையின் போது ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இருப்பினும் ஸ்ரெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காரணத்தை ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மக்களின் உயிர் ஆபத்தில் இருக்கும் போது ஏன் ஆலையை திறக்க கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உரிய பதிலை தமிழக அரசு அளிக்க வேண்டுமென்று விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவின் ஆயிரம் விளக்கு வேட்பாளரான குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
We need oxygen. If #Sterlite can be opened up JUST to produce oxygen to save lives, which we need to see as our prime focus during this pandemic,then let be. Urge n humbly request Govt of TN and our H’ble Cm @EPSTamilNadu avl to not to oppose to this. 🙏🏻🙏🏻
அதில், “நமக்கு ஆக்ஸிஜன் தேவை உள்ளது. உயிர்களை காப்பாற்றுவதற்காக ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்றால் அது நடக்கட்டுமே. இந்த பெருந்தொற்று காலத்தில் உயிர்களை காப்பதே நம் முக்கிய நோக்கமாகும். ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என முதல்வர் பழனிசாமியை நான் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
Published by:Arun
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.