தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அபாயகரமான அளவில் விஷவாயுவை வெளியேற்றக்கூடிய ஒரே ஆலை ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரும் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், 1994-ம் ஆண்டு வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க அனுமதி கோரியபோது, கொள்கை அடிப்படையில் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
சுற்றுச்சூழல், காற்று, தண்ணீர் மாசு அடையும் வகையில் ஆலைக்குள் கழிவுகளைத் தேக்கி வைத்ததால், 2013-ம் ஆண்டு விஷ வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், 2018 ஜனவரி 31-ல் ஆலை இயக்குவதற்கான உரிமத்தை புதிப்பிக்கக்கோரி ஆலை நிர்வாகம் விண்ணப்பித்தது. அதன்படி, நேரில் ஆய்வு செய்தபோது விதிமுறைகள் பின்பற்றப்படாததால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆலையை தொடர்ந்து இயக்கக்கூடாது என 2018 ஏப்ரலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2018 மே மாதம் 18, 19 தேதிகளில் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ஆலையை ஆய்வு செய்தபோது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மீறி உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஆலையை மூடவும், மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டது. 2018 மே 28-ம் தேதி நிரந்தரமாக ஆலையை மூட கொள்கை முடிவெடுத்து, ஆலை மூடப்பட்டது. இந்தக் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. தொடர்ந்து நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் ஆகியவற்றை மாசுபடுத்திய காரணத்தினாலேயே ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது.
உச்ச நீதிமன்றம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து அதை தூத்துக்குடி பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க உத்தரவிட்டது. ஆனால் இந்த நிறுவனத்தால் ஆயிரத்து 392 கோடி ரூபாய் லாபம் ஈட்டக்கூடிய நிறுவனத்திற்கு இந்தத் தொகை மிகவும் குறைவு. ஸ்டெர்லைட் மாசினால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம் என்பதால் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து ஈட்டிய லாபத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஏற்படுத்திய மாசுவை அரசோ, நீதிமன்றமோ கண்மூடி வேடிக்கை பார்க்க கூடாது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மொத்தமுள்ள 60 தொழிற்சாலைகளில் 51 ஆலைகள் இயங்குகின்றன. அவற்றில் 33 ஆலைகள் எந்தக் கழிவையும் வெளியேற்றுவதில்லை. மீதமுள்ள 18-ல் நான்கு ஸ்டெர்லைட் யூனிட்டுகள் காற்றையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றன. மீதமுள்ள 14-ல் 2 ஆலைகள் வெளியேற்றும் கழிவுகள் சூரிய ஒளியில் ஆவியாகிவிடுகின்றன.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அபாயகரமான அளவில் விஷவாயுவை வெளியேற்றக்கூடிய ஒரே ஆலை ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே. ஆலை மாசு காரணமாக அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் வந்துள்ளன. மாசு காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர், உயிரினங்கள் உட்கொள்ள உகந்ததற்றதாக ஆகிவிட்டது. ஆலை மூடிய பின்னர் நிலத்தடி நீரின் தரம் மேம்பட்டு, காற்று மாசு குறைந்துள்ளது.
மூன்றாயிரம் கோடி ரூபாய் மூலதன செலவுடன் தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட், கடந்த பல ஆண்டுகளாக ஆண்டுக்கு தலா 2 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ள நிலையில், நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறுப்படுவது அபத்தமானது. எனவே நிரந்தரமாக மூட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.