• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கோரிய வழக்கு! தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கோரிய வழக்கு! தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட்

  • News18
  • Last Updated :
  • Share this:
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு விசாரித்து வருகின்றது.

    வழக்கு விசாரணையின் 39-வது நாளான இன்று அரசு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் சார்பாக மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    அப்போது, மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்றும் ஆலையைச் சுற்றி பசுமை போர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்தின் விதிகளை தொடர்ந்து பின்பற்ற மறுத்ததின் காரணமாக தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது அரசின் கொள்கை முடிவு என்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் காரணமாக ஆலை மூடப்பட்டது என கூறப்படுவது தவறு என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதாந்தா நிர்வாகம் கூறும் நிலையில், ஆலை ஆரம்பித்து தற்போது வரை 20 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது என தெரியவருகிறது.

    அதிக மாசு ஏற்படுத்தியதால் ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்ச நீதிமன்றம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்ததாகவும், ஆலையை மூடிய பின்னர் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசு குறைந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அரியமா சுந்தரம், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டால் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவோம் என்றும் கூடுதல் கட்டுபாடு விதித்தாலும் அதை பின்பற்றத் தயார் என தெரிவிக்கப்பட்டது.

    மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒட்டுமொத்த வாதமும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலானது. ஸ்டெர்லைட் ஆலை மட்டும் மாசு ஏற்படுத்தவில்லை எனவும் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: