பட்டா இருக்கு, மனை இல்லை... ஒலிம்பிக் வீரருக்கு அரசு வழங்கிய நிலத்தின் அவல நிலை

ஒலிம்பிக் வீரருக்கு அரசு வழங்கிய நிலத்தின் நிலை

ஒலிம்பிக் போட்டியில் சாதனை படடைத்த வீரருக்கு அரசு பட்டா வழங்கியும் நிலம் வழங்கப்படாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

  • Share this:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த செளந்தர்ராஜன் மகன் ஆரோக்கிய ராஜீவ். இந்திய ராணுவ வீரர். சிறுவயது முதலே தடகளத்தில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றவர். குடும்ப வறுமையையும் வென்று சாதித்து வருபவர். தற்போது நடைபெற்று முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் , முந்தைய ரியோ ஒலிம்பிக் என  2 ஒலிம்பிக் போட்டிகளில் 4× 400 தொடர் ஓட்டத்தில் இந்திய அணிக்காக ஓடியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆரோக்கிய ராஜுவ் அடங்கிய இந்திய அணி பதக்கம் வெல்லும் வாய்ப்பை ஓரிரு வினாடிகளில் இழந்தாலும் ஆசிய சாதனைப் படைத்து, பாராட்டைப் பெற்றுள்ளது.

ஆசிய, காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச தடகளப் போட்டிகளில் ஆரோக்கிய ராஜீவ் பதக்கம் வென்று, இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். மத்திய அரசின் அர்ஜூனா விருதையும் இவர் பெற்றுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து தமிழ்நாடு அரசு ₹ 20 லட்சம் சன்மானம் வழங்கியது.

Also Read : கவனிப்பாரின்றி குஜராத்தில் கூலி வேலை செய்யும் பார்வையற்றோர் உலகக்கோப்பை கிரிக்கெட் வீரர்

அப்போது, வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களுக்கு வழுதியூர் கிராமத்தில் அரசு இலவச மனை வழங்கக் கோரி, ஆரோக்கிய ராஜீவின் தந்தை 2014ம் ஆண்டு அரசுக்கு மனு அளித்தார். இதையடுத்து லால்குடி அருகே அரியூரில் 2 சென்ட் நிலம் இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கான பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை நிலத்தை ஒப்படைக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலர் தொடங்கி, முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை கோரிக்கை மனு அனுப்பியும் பலன் இல்லை.

Also Read : கஜகஸ்தான் வீரரிடம் கடிவாங்கிய அனுபவத்தை பகிர்ந்த ரவிக்குமார் தாஹியா.. வலியை தாங்கிய வெற்றி வீரன்

பட்டா கிடைத்து விட்டது. நிலம் கிடைக்குமா....? என்று காத்திருக்கிறோம். ஆறாண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறோம் என்கிறார் ஆரோக்கிய ராஜீவின் தாயார் லில்லி சந்திரா. ஆரோக்கிய ராஜீவ் குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனை உள்ள பகுதி, முட்புதராக இருக்கிறது. இதை அகற்றி, மேலும் சிலருக்கும் இங்கு வீட்டு மனை வழங்கப்படவுள்ளது என்று வருவாய்த்துறை வட்டாரத்தில் கூறுகின்றனர்.

இரண்டு முறை ஒலிம்பிக் உட்பட பல்வேறு உலகளாவிய போட்டிகளில் தங்கம் வென்ற வீரருக்கு அரசு கொடுத்த வீட்டு மனை பேப்பரில் மட்டும் இருக்கிறது. கையில் கிடைப்பது எப்போது...? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: