இந்தியாவின் முன்னாள் பிரதமரான வி.பி.சிங்கிற்கு தமிழகத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவரான சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 92&ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாமானிய மக்களுக்கு சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக எதையும் இழப்பேன் என்று முழங்கிய வி.பி.சிங் பிறந்தநாளில் அவரது சமூகநீதி சாதனைகளை நினைவு கூர்வதிலும், அவரை போற்றுவதிலும் பெருமை கொள்கிறேன்.
இந்தியாவில் பட்டியலின, பழங்குடியின மக்களைத் தவிர்த்து சமூக அடிப்படையிலும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளனர்; அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், அதற்கான சட்டப்பிரிவுகளை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்த்தவர் அண்ணல் அம்பேத்கர். அவர் கண்ட கனவை நிறைவேற்றி முடித்தவர் வி.பி.சிங் அவர்கள் தான். அதனால் தான் அவர் சமூகநீதிக் காவலர் எனப் போற்றப்படுகிறார்.
இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் 1950-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே தொடங்கப்பட வேண்டும் என்பது தான் அம்பேத்கரின் விருப்பம். ஆனால், தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது 1990-ஆவது ஆண்டில் தான். வி.பி.சிங் மட்டும் இல்லையென்றால் அதுவும் கூட சாத்தியமாகியிருக்காது. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் அரசியல் துணிச்சலும், சமூகநீதியில் கொண்டிருந்த அக்கறையும் தான் இடஒதுக்கீட்டை சாத்தியமாக்கின.
இந்தியாவின் சமூகநீதிச் சூழல் இன்றும் கூட செழுமையானதாக இல்லை. 30 ஆண்டுகளுக்கு முன் சமூகநீதி குறித்து தேசிய அளவில் பேசுவதே பாவமாக கருதப்பட்டது. தென் மாநிலங்கள் சமூகநீதிக்கு சாதகமானவையாக திகழ்ந்தன என்றால், வட மாநிலங்களில் நிலைமை அதற்கு நேர் எதிராக இருந்தது. வட மாநிலங்களில் தேர்தல் வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பவர்கள் உயர்வகுப்பினராகத் தான் இருந்தனர்; அவர்கள் கைகாட்டுபவர்களுக்கு வாக்களிக்கும் அவல நிலையில் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அதனால் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த காகா கலேல்கர் ஆணையத்தின் அறிக்கை நிராகரிக்கப்பட்டது; மண்டல் ஆணைய அறிக்கை 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இத்தனை தடைகளையும் தகர்த்து மண்டல் ஆணையத்தின் பரிந்துரையின் ஒரு பகுதியை ஏற்று மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கியதால் தான், இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் வி.பி.சிங் இணையற்ற தலைவராக உயர்ந்து நிற்கிறார்.
Also Read : பெரியாருக்கு பாரத் ரத்னா... மோடிக்கு பாராட்டு: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த தீர்மானங்கள் என்னென்ன?
மத்திய அரசு வேலைவாய்ப்பில் 27% இட ஒதுக்கீட்டை வி.பி.சிங் நடைமுறைப்படுத்தியதால் தான், பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் முயற்சியால் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அந்த இட ஒதுக்கீட்டை நீட்டிக்க முடிந்தது. பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் சட்டப்போராட்டத்தால் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பிலும் 27% இட ஒதுக்கீடு சாத்தியமானதற்கு வி.பி.சிங் அமைத்துக் கொடுத்த அடித்தளம் தான் காரணம். வி.பி.சிங் மட்டும் மண்டல் ஆணைய அறிக்கையை செயல்படுத்தியிருக்காவிட்டால், இன்று வரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தேசிய அளவில் இட ஒதுக்கீடு கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

வி.பி.சிங்
மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்ததுடன் வி.பி. சிங் ஓய்ந்து விடவில்லை. அது செயல்படுத்தப்படுவதற்காகவும் போராடினார். 27% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் அதை நரசிம்மராவ் அரசு செயல்படுத்த தாமதித்ததால், இட ஒதுக்கீடு செயலாக்கப்படும் வரை தில்லிக்குள் நுழைய மாட்டேன் என்று கூறி தலைநகரை விட்டு வி.பி.சிங் வெளியேறினார். அவரது இந்த போராட்டத்தால் அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக 27% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. வி.பி.சிங் மட்டும் 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமல் இருந்திருந்தால், உயர்வகுப்பு மக்களின் முழுமையான ஆதரவுடன் அடுத்து வந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்றி பிரதமராக தொடர்ந்திருக்கலாம். ஆனால், ஆட்சிக் கணக்கைப் போடாமல், சமூகநீதிக் கணக்கை போட்டதால் தான் அவர் சமூகநீதிக் காவலராக போற்றப்படுகிறார்.
சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக போராடிய வி.பி.சிங் அவர்களின் வரலாற்றை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அதற்கு வசதியாக அவரது வரலாறு தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பாடமாக சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் சென்னையில் வி.பி.சிங் அவர்களுக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய பிரமாண்ட மணிமண்டபமும் அமைக்கப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.