Home /News /tamil-nadu /

விசாரணைக் கைதி லாக்அப் மரணம்: தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கிய மாநில மனித உரிமை ஆணையம்

விசாரணைக் கைதி லாக்அப் மரணம்: தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கிய மாநில மனித உரிமை ஆணையம்

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு..

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு..

சென்னையை ஒட்டிய கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி லாக்அப் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்தவர் அப்பு (எ) ராஜசேகர்(30) இவரை கொடுங்கையூர் போலீசார் வழக்கு ஒன்றுக்காக நேற்றைக்கு முந்தைய தினம் இரவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென ராஜசேகருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொடுங்கையூர் போலீசார் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு ராஜசேகரின் உடல் நிலை மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனை நிர்வாகம், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து போலீசார் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ராஜசேகரை கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனை செய்த ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் வரும் வழியிலேயே ராஜசேகர் உயிரிழிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    காவல் நிலைய விசாரணையின்போது மீண்டும் ஒரு கைதி உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜசேகர் உயிரிழந்த உடனேயே வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனையடுத்து, ராஜசேகர் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில், காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையத் தலைவர் எஸ்.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Lockup death

    அடுத்த செய்தி