Urban Local Body Election: தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிந்தும் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தையும் நடத்தியது.
இதனிடையே, கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனினும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் தங்களால்
தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திவிட்டது. இரண்டாவது அலை அளவுக்கு தற்போது நிலவரம் மோசமாக இல்லை என்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கம்பீரமாக வலம் வந்த அலங்கார ஊர்திகள்.... சென்னையில் சிறப்பாக கொண்டாடப்பட்ட குடியரசுதின விழா - புகைப்படங்கள்
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 அட்டவணை வெளியீடு தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.