ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

MK Stalin Cabinet | இன்று ஸ்டாலின் அமைச்சரவை பட்டியல் வெளியாகிறது - யார் யாருக்கு வாய்ப்பு?

MK Stalin Cabinet | இன்று ஸ்டாலின் அமைச்சரவை பட்டியல் வெளியாகிறது - யார் யாருக்கு வாய்ப்பு?

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

புதிய அமைச்சரவையில் கம்பம் ராமகிருஷ்ணன், ராமநாதபுரம் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், மா.சுப்பிரமணியம், நா.எழிலன், ஆவடி நாசர் போன்ற 20 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் தகவல்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் நாளை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவிபிரமாணம் எடுக்க இருக்கிறார்.

நீண்ட கால எதிர்பார்ப்புக்கு கிடைத்த பதிலாக திமுக ஆட்சியமைக்கும் நிலையில் தற்போது அடுத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது அமைச்சரவை பற்றியதாகத் தான் உள்ளது. புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெறப் போகிறார்கள்? யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்? யாருக்கு மறுக்கப்படும்? யாருக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என அடுத்தகட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

தி.மு.க அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் என்பது தொடர்பாக தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் புதிய அமைச்சரவை, அனுபவம் மற்றும் இளமை என இரண்டும் கலந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. கே.என்.நேரு, ஐ.பெரியசாமி போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்களுடன், அன்பில் மகேஷ் போன்ற புதிய முகங்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

சீனியர்களை பொறுத்தவரையில் துரை முருகன், பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அனிதா ராதகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு போன்றவர்களுக்கு வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதேபோல அன்பில் மகேஷ், டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா, பி.டி,ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியவர்களுக்கு அமைச்சரவையில் இடம் பெற அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

குறிப்பாக கே.என் நேருவிற்கு உள்ளாட்சித்துறையும், அன்பில் மகேஷுக்கு பள்ளி கல்வித்துறையும், அனிதா ராதகிருஷ்ணனுக்கு வனத்துறையும், ஐ.பெரியசாமிக்கு மின்சாரத்துறையும், தங்கம் தென்னரசுவிற்கு தொழில் துறையும், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு வணிகவரித்துறையும் ஒதுக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

புதிய அமைச்சரவையில் கம்பம் ராமகிருஷ்ணன், ராமநாதபுரம் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், மா.சுப்பிரமணியம், நா.எழிலன், ஆவடி நாசர் போன்ற 20 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதே போல உதயநிதி ஸ்டாலின் இந்த புதிய அமைச்சரவையில் இடம்பெறுவாரா என்ற சஸ்பென்ஸும் நீடித்து வரும் நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் என்பதே திமுக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

இதனிடையே இன்று மதியம் ஸ்டாலினின் அமைச்சரவை பட்டியல் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. துறை ஒதுக்கீடு இல்லாமல் இப்பட்டியல் வெளியாகும் எனவும் ஆளுநரிடம் அமைச்சரவை பட்டியல் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Published by:Arun
First published:

Tags: DMK, DMK Stalin, TN Assembly Election 2021