ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இனி தமிழகத்துக்குப் பொற்காலம்தான்: முதல்வர் ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு

இனி தமிழகத்துக்குப் பொற்காலம்தான்: முதல்வர் ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு

வைகோ

வைகோ

முதல்வராகப் பொறுப்பேற்ற சில மணி நேரத்திற்குள்ளாகவே ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார் ஸ்டாலின் என்று கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றார். அதன் பின்னர் கொரோனா நிவாரண தொகை, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பால் விலை குறைப்பு உள்ளட்ட 5 முக்கிய அரசாணைகளை அவர் பிறப்பித்துள்ளார்.

  வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணை, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.5.2021 முதல் குறைத்து உத்தரவிட்ட ஆணை,

  நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய அனுமதியளிக்கும் ஆணை, மக்கள் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்கும் ஆணை என்று 5 முக்கியமான அரசாணைகளில் கையெழுத்திட்டார் முதல்வர் ஸ்டாலின்.

  இதனைப் புகழ்ந்து தனியார் தொலைக்காட்சி பேட்டியில் வைகோ கூறியதாவது:

  'சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்று கூறியது மட்டுமல்ல, முதல்வராகப் பொறுப்பேற்ற சில மணி நேரத்திற்குள்ளாகவே ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார் ஸ்டாலின்.

  அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரத்து 451 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ஏற்கெனவே ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் அதை 5 வாக்குறுதிகளோடு இன்றே தொடங்கி இருக்கிறார். இனி வரவுள்ள ஐந்து ஆண்டுகளும் பொற்கால ஆட்சியாக இருக்கும் என்பதற்கான அடையாளம் இது.

  அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம், பால் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைப்பு, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதிக்குப் பெருமை சேர்க்கும் வகையில், தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற சொல்வதற்கு இணங்க, ஸ்டாலின் இந்தத் திட்டங்களை அறிவித்திருக்கிறார். இது தமிழகத்தின் எதிர்காலம் பொன்மயமாக இருக்கும் என்ற வெளிச்சத்தைக் காட்டுகிறது. என்று வைகோ தெரிவித்துள்ளார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Cm, M.K.Stalin, Tamilnadu, Vaiko