Home » News » Tamil-nadu » STALIN JOINS RISING CHORUS AGAINST IMPOSITION OF HINDI IN TAMIL NADU SKD

கனவில் கூட நினைக்காதீர்கள்! மும்மொழிக் கொள்கை பரிந்துரையில் மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

பா.ஜ.க அரசின் மத ரீதியான, மொழி ரீதியான கலாச்சார மேலாதிக்க அஜெண்டாக்களுக்கு அடங்கி ஒடுங்கி ஆதரவுக் கரம் நீட்டும் அ.தி.மு.க அரசு இதற்கும் ’ஆமாம் சாமி’ போடாமல், இதற்கு எடப்பாடி பழனிசாமி இப்போதே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

கனவில் கூட நினைக்காதீர்கள்! மும்மொழிக் கொள்கை பரிந்துரையில் மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: June 1, 2019, 9:14 PM IST
  • Share this:
தமிழ்நாட்டில் மும்மொழித் திட்டத்தைக் கொண்டு வந்துவிடலாம் என்று பா.ஜ.க அதனுடைய கனவின் ஓரத்தில் கூட நினைத்துப் பார்க்க எத்தனிக்கக் கூடாது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரையில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இது தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘ இந்தி உள்ளடக்கிய மும்மொழித் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் தலைமையிலான புதிய கல்விக் கொள்கை வகுக்கும் குழு அளித்துள்ள பரிந்துரைக்கு தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டின் ஒருமைப்பாட்டையும், செம்மொழியாம் தாய்த் தமிழைச் சிறுமைப்படுத்தி ஒதுக்கவும், மொழி வாரி மாநிலங்களின் தேசிய உணர்வுகளில் வெந்நீர் ஊற்றும் விதத்திலும், ‘ப்ரி ஸ்கூல் முதல் 12-ம் வகுப்பு வரை இந்தி வழிக் கல்வி என்ற விபரீதமான நாட்டைப் பிளவுபடுத்தும் பரிந்துரையை இந்தக் குழு அளித்திருப்பது பேரதிர்ச்சியாகவுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டங்களை தமிழர்கள் கிளர்ந்து எழுந்து நடத்தி பலர் இன்னுயிர் இழந்து இளைஞர்களின் உயிர்த் தியாகத்தின் விளைவாக தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைத் தீர்மானம் அண்ணா ஆட்சியில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அந்த இரு மொழிக் கொள்கையே தமிழ்நாட்டில் சிங்கநடை போட்டுவருகிறது.


’இந்தியாவிலுள்ள மொழிகளில் எது தகுதி உள்ள மொழி என்றால் அது ‘தமிழ்’ ’தமிழ்’ என்று சொல்லத் தயக்கப்படமாட்டேன் என்று சட்டமன்றத்தில் அண்ணா முழங்கியது இன்றைக்கும் இளைஞர்களின் காதுகளில் ரிங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தமது பினாமி அ.தி.மு.க அரசை மிரட்டி முதலமைச்சரின் கையை முறுக்கி இந்தத் திட்டத்தையும் நிறைவேற்றிவிடுவோம் என்று கனவு காண்கிறதா? மொழி உணர்வு தமிழர்களின் ரத்தத்தில் இரண்டறக் கலந்தது.

அந்த ரத்தத்தில் இந்தி என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயாமாகச் செலுத்த முயன்றாலும் அதை தி.மு.க ஒரு போதும் சகித்துக் கொள்ளாது. கடுமையாக எதிர்த்து போராடும். தமிழ்நாட்டு மக்களையும், மாணவர்களையும் தூண்டிவிட்டு மீண்டுமொரு மொழிப் போராட்டத்துக்கு மத்திய பா.ஜ.க அரசு வழி அமைத்துவிடாது என்றே இன்னும் நம்புகிறேன்.

புதிய வரைவுக் கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டத்தை பரிந்துரைத்ததோடு, ’குருகுலக் கல்வி முறையைக் கொண்டு வரவேண்டும்’ ’சமஸ்கிருதத்தை அனைத்துப் பள்ளிகளிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் பயிற்றுவிக்க வேண்டும்’ எளிய முறையில் சமஸ்கிருதம் கற்கும் நூல்களை அதிக எண்ணிக்கையில் பள்ளிகளில் இடம்பெறச் செய்யவேண்டும்’ இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள இந்தி ஆசிரியர்களை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி இந்தி கற்றுக் கொடுக்கச் சொல்லவேண்டும்,அதற்காக இந்தி பேசும் மாநிலங்களுக்கும் இந்தி பேசாத மாநிலங்களுக்கும் ஆசிரியர் பரிமாற்ற ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற இந்தி பேசாத மக்களுக்குக் காலப் போக்கில் பேரபாயத்தை ஏற்படுத்தும் பரிந்துரைகள், அந்த வரைவு அறிக்கையில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தி அளிக்கப்பட்டுள்ள மிகச் சில பரிந்துரைகளின் மீதான நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் சிதைத்துவிட்டது.

பா.ஜ.க அரசின் மத ரீதியான, மொழி ரீதியான கலாச்சார மேலாதிக்க அஜெண்டாக்களுக்கு அடங்கி ஒடுங்கி ஆதரவுக் கரம் நீட்டும் அ.தி.மு.க அரசு இதற்கும் ’ஆமாம் சாமி’ போடாமல், இதற்கு எடப்பாடி பழனிசாமி இப்போதே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். வெளிப்படையாக எதிர்ப்பு காட்டி தடுத்து நிறுத்தும் தைரியம் இல்லையென்றால், கட்சியின் பெயரில் உள்ள அண்ணா, திராவிட என்ற இரு சொல்களையும் நீக்கிவிட வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள இரு மொழிக் கொள்கை என்ற தேன் கூட்டில் கல் வீசி, தமிழ்நாட்டில் மும்மொழித் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துவிடலாம் என்று பா.ஜ.க அரசு, தன் கனவின் ஓரத்தில் கூட நினைத்துப் பார்க்க எத்தினிக்கக் கூடாது. அப்படிப்பட்ட பேராசைக் கனவும் அதற்கான பிழையான காரியமும் அவர்களுக்கு பேரிடரை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: June 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading