``திமுக என்றாலே சிம்ம சொப்பனம் என்பதால்தான், எப்போதும் நடுங்கும் முதலமைச்சரும், ஆட்சியாளர்களும் துணிவிருந்தால், எங்கள் மீது வழக்குப் போடட்டும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ``அதிமுக அரசு தங்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் கொண்டுள்ள கடும் அதிருப்தியையும், கோபத்தையும் மறைக்க நினைத்து, திமுகவுக்கு எதிராகப் பொதுக்கூட்டம் நடத்தி, ஜனநாயகத்தையே நகைச்சுவைப் பொருளாக்கி இருக்கிறார்கள்.
கடந்த 2011 முதல் ஆட்சியில் இருப்பது அதிமுக தான்; திமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது. எங்காவது, 7 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சியாக உள்ள அரசியல் கட்சிக்கு எதிராக, ஆளுங்கட்சியின் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லாரும் கூடிக் கும்மாளமிட்டு போராட்டம் நடத்திக் கூப்பாடு போடும் கேலிக்கூத்தைக் கேட்டதுண்டா? கண்டது உண்டா?
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஏதோ சொல்லிவிட்டார் என்று, அதை முழுமையாகக் கூடப் படித்துணராமல், திமுக மீதும், காங்கிரஸ் மீதும் போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டும், கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறது ஆளுங்கட்சியான அதிமுக. ஈழப்பிரச்னையில் 1956 முதல் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அரசியல் இயக்கம் எது என்பதும், ஐ.நா. மன்றம் வரை சென்று அதற்காக மனு அளித்த இயக்கம் எது என்பதும் ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டு மக்களும் நன்கறிந்த உண்மைதான்.
அதேநேரத்தில், போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்; பிரபாகரனைக் கைது செய்து கொண்டுவந்து தண்டனை தர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி ஏகடியம் பேசி எள்ளி நகையாடி, ஈழத்தமிழருக்கு உதவி செய்த காரணத்திற்காக திமுக ஆட்சியைக் கலைத்திட, ஜனநாயக விரோதக் குரோதத்துடன் செயல்பட்டது அதிமுக, என்கிற துரோக வரலாறும் பதிவாகியிருக்கிறது; அதை ஈழத்தமிழர்களும் உணர்ந்தே வைத்திருக்கிறார்கள்.
எடுத்துக்கொண்ட பிரச்னையைக் கூடப் பேசாமல் அல்லது ஈழப் பிரச்னையின் அறுபதாண்டு கால வரலாற்றைப் பேசத் தெரியாமல், திமுகவைப் பற்றி மட்டுமே, முதலமைச்சரில் தொடங்கி அத்தனை பேரும் பேசியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே, எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுகதான் மக்களின் மகத்தான செல்வாக்கைப் பெற்றிருக்கும் இயக்கமாக இருக்கிறது என்ற உண்மை, அதிமுகவினரை உறங்கவிடாமல் உறுத்திக்கொண்டே இருக்கிறது என்பது புரிந்துவிடும்.
அப்படியென்றால், அதிமுகவினருக்கு உண்மையாகவே ஈழத்தமிழர் மீது அக்கறை இருக்குமென்றால், வாஜ்பாய் அவர்கள் சார்ந்திருந்த பாஜகவைக் கண்டித்துதானே முதற்கட்டமாகப் பொதுக்கூட்டம் - போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். எஜமானர்களை எதிர்த்து எப்படிப் போராட்டம் நடத்த முடியும்?
திமுக ஆட்சியில் ஊழல் என்றால் இத்தனை ஆண்டுகாலமாக ஆட்சியில் இருக்கும் நீங்கள் வழக்குப் போட்டு நிரூபித்திருக்க வேண்டியதுதானே? அதை யார் தடுத்தார்கள்? திமுக மீது உங்களால் அப்படி குற்றம் சுமத்த முடியுமென்றால், நீதிமன்றத்தில் சென்று நிரூபித்துக் காட்டுங்கள்’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Admk protest, DMK, M.K.Stalin