ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் தொகுப்பு : 6 அடிக்கு குறையாத கரும்புகள் மட்டுமே கொள்முதல் : தமிழக அரசு வெளியிட்ட  வழிகாட்டு நெறிமுறை!

பொங்கல் தொகுப்பு : 6 அடிக்கு குறையாத கரும்புகள் மட்டுமே கொள்முதல் : தமிழக அரசு வெளியிட்ட  வழிகாட்டு நெறிமுறை!

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

பொங்கல் தொகுப்பில் வழங்கும் கரும்புகளை கொள்முதல் செய்ய வழிகாட்டு நெறிமுறையில் ஒரு கரும்புக்கு 33 ரூபாய் என்ற அடக்க விலையில் விவசாயிகளிடம் இருந்து வாங்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பரிசுத் தொகுப்பில் விநியோகம் செய்வதற்காக இடைத்தரகர்கள் தலையீடு இன்றி விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையுடன் ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். எனினும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு தமிழ்நாடு விவசாயிகளிடம் இருந்து தான் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்றும் இடைத்தரகர்கள் தலையீடு இன்றி மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் கூட்டுறவு, வேளாண்மை அதிகாரிகள் கரும்பை கொள்முதல் செய்வார்கள் என்று தெரிவித்தார்.

இதற்காக மாவட்ட அளவில் கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் வேளாண்மை துறை இணை இயக்குநர், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.  பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான கரும்புகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு 72 கோடியே 38 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒரு கரும்புக்கு போக்குவரத்து செலவு உட்பட 33 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கரும்பு கொள்முதல் செய்ய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:- பன்னீர் கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்; 6 அடிக்கு குறையாத கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்; சராசரி தடிமனை விட கூடுதல் தடிமனாக கரும்பு இருக்க வேண்டும்; நோய் தாக்கிய நிலையில் இருக்கும் பன்னீர் கரும்பினை கொள்முதல் செய்யக் கூடாது; விவசாயிகள் தரப்பில் இருந்து புகார்களுக்கு இடமளிக்காத வகையில் அந்த மாவட்டங்களில் விளையும் கரும்பை கொள்முதல் செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும்; கரும்பு விளையாத மாவட்டங்களில் விநியோகம் செய்ய, அருகில் உள்ள மாவட்டங்களில் விளையும் கரும்பினை வழிகாட்டு நெறிமுறைப்படி கொள்முதல் செய்யலாம்; கரும்பு கொள்முதல் பணியின் போது சிறு, குறு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; ஒரு கிராமத்தில் ஒரே விவசாயியிடம் ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்யாமல், கிராமம் முழுவதும் கரும்பின் தரம் அடிப்படையில் பரவலாக கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரும்பு கொள்முதல் பணியில் எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலையை சம்பந்தப்பட்ட விவசாயியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

First published:

Tags: MK Stalin, Pongal Gift