நூற்றி எட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா கடந்த 14ஆம் தேதி திரு நெடுந்தாண்டகம் நிகழ்வுடன் தொடங்கியது. அன்று முதல் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்களை இசை, அபிநயத்துடன் பாடத் தொடங்கினார்கள். இந்த பாடல்களை பெருமாள் கேட்டு மகிழ்வதாக நம்பிக்கை.
கடந்த 15ம் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கியது. பகல் பத்துபத்தும் நேற்றுடன் (24ம் தேதி) நிறைவு பெற்றது. நம்பெருமாள் , நாச்சியார் திருக்கோலம் எனும் மோகினி அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
இன்று முதல் இராப் பத்து தொடக்கம்
முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் எனும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. காலை 4.45 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டைடை, கிளி மாலை, ரத்தின அங்கி அணிந்து புறப்பட்டு சந்தனு மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிகேட்டான் வாயில், கொடி மரம், குலசேகரன் திருச்சுற்று, விரஜாநதி மண்டபம் வழியாக அரையர்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடல்களைப் பாடி வர, பெருமாளை பின் தொடர்ந்து வேத பாடல்களைப் பாடியபடி சென்றனர்.
அதன் பின்னர் சொர்க்க வாசலைக் கடந்து திருமாமணி மண்டபம் எனும் ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார். இன்று முதல் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டிருக்கும். தரிசன நேரங்களில் ஆன்லைன் முன்பதிவு செய்து, முத்தங்கி சேவை தரும் மூலவர் பெரிய பெருமாள் தரிசனம் செய்து, சொர்க்க வாசலை கடந்து செல்லலாம். மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 2000கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோயில் வளாகத்தில் தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரங்கா ரங்கா கோபுரத்திலிருந்து தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மலர் தோரணங்களுடன் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு அனுமதி
மிக விரிவான பாதுகாப்பு, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பல்லாயிரம் திரளும் விழாவில் கோயில் வளாகம் பக்தர் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஸ்ரீரங்கத்தை நோக்கி வரும் வாகனங்களின் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முதல்முறையாக பக்தர்கள் அனுமதியின்றி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இந்நிலையில், காலை 8 மணிக்கு பிறகு, மற்ற நேரங்களில் கோயில் இணையதள முன்பதிவின் மூலம் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று ஏற்கனவே கூறிய படி, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தமிழ்ப் பாசுரங்களுக்கான விழா என்றழைக்கப்படும் இந்த விழாவில் நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடல்களை அபிநயத்துடன் பாடிவருகின்றன.
விழாவின் மற்றுமொரு முக்கிய நிகழ்வான திருமங்கை மன்னன் வேடுபறி வரும் 1ம் தேதியும் தொடர்ந்து 4ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் என்கிற நிகழ்வோடு நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.
இன்று மட்டும் ரூ 250 கட்டண தரிசனத்திற்கும், 3,500 இலவச தரிசனத்திற்கும் சொர்க்க வாசலை மட்டும் கடந்து செல்ல 10 ஆயிரம் பேர் என மொத்தம் 17,000 பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு, பக்தர்கள் அனுமதி..
ஆங்கில ஆண்டு கணக்கில் 2020ல் இரண்டு முறை சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது. கடந்த ஜனவரி 6ம் தேதியும் இன்றும் திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் திறப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை ஸ்ரீரங்கம் கோயில் இணைய தளம், யூ ட்யூப்பிலும் நேரலை செய்கிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்