• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தங்கக் கவசம் இல்லாத ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உற்சவர் சிலை புகைப்பட சர்ச்சை... தவறு யார் மீது..?

தங்கக் கவசம் இல்லாத ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உற்சவர் சிலை புகைப்பட சர்ச்சை... தவறு யார் மீது..?

  • Share this:
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உற்சவ மூர்த்தியான நம்பெருமாளின் தங்கக் கவசம் இல்லாத முழுமையான புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் காவல்துறையிடம் புகாரளித்துள்ளது.

    தமிழகத்தின் கோவில்களில் உள்ள மற்ற உற்சவ மூர்த்திகளைப் போல் அல்லாமல், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உற்சவரான நம்பெருமாளுக்கு தனி வரலாறே உண்டு. 1323ம் ஆண்டில் அந்நியப் படையெடுப்பின் போது அவரை துாக்கிக் கொண்டு தமிழகம் முழுவதும் தலைமறைவாக சுற்றி வந்தனர் வைணவர்கள். 48 ஆண்டுகளாக தமிழகம், கேரளா மாநிலங்களில் சுற்றி வந்தவர் மீண்டும் 1371ம் ண்டில்தான் ஸ்ரீரங்கத்திற்கு வந்தார்.

    இப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மையான வரலாறு கொண்ட நம்பெருமாள் உற்சவ மூர்த்தி தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆண்டு முழுவதும் தங்கக் கவசத்தில் காட்சியளிக்கும் நம்பெருமாளின் திருமேனி, அந்த கவசமில்லாமல் பெருமாளின் திருமேனி சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி?

    ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன். இவர் அமெரிக்காவில் ஐடி துறையில் பணிபுரிந்து விட்டு 2017ம் ஆண்டு ஸ்ரீரங்கத்திற்கு வந்து குடியேறினார். அப்போது முதல் ரங்கநாதர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தனது முகநுால் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

    இந்து சமய அறநிலையத் துறை மீது இவர் தொடுத்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாளுக்கு படைக்கப்படும் உணவின் அளவு குறைக்கப்பட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். 2015ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் திருப்பணிக்குழு அமைக்காமல் பணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தார்.

    மேலும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பணிகளின் போது பெரிய பெருமாளின் கால்கள் மாற்றப்பட்டதாக பரபரப்புக் குற்றச்சாட்டுகளை கூறினார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவர் கொடுத்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜனவரி 31ம் தேதி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற இவரை சிலர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான புகாரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    இந்த நிலையில்தான், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உற்சவ மூர்த்தியான நம்பெருமாளின் தங்கக் கவசம் இல்லாத திருமேனியின் புகைப்படத்தை தனது முகநுால் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். ஏற்கனவே கோவில் நிர்வாகத்தின் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்து வரும் ரங்கராஜன், நம்பெருமாள் உற்சவ மூர்த்தியையே மாற்றிவிட்டதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதன் அடிப்படையில்தான் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டதாக ரங்கராஜன் தெரிவித்துள்ளார்

    தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் , புகைப்படத்தில் இருக்கும் நம்பெருமாளுக்கும் ,தற்போது வழிபாட்டில் இருக்கும் பெருமாளுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் தெரிந்து கொள்ளவே தான் புகைப்படத்தை வெளியிட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து உற்சவர் புகைப்படத்தை விதிமுறைகளை மீறி சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக ரங்கராஜன் மீது கோவில் நிர்வாகம் சார்பில் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது

    இது பற்றி கோயில் இணை ஆணையர் ஜெயராமனை தொடர்பு கொண்டு கேட்ட போது, பல லட்சம் பக்தர்களின் நம்பிக்கையான நம்பெருமாளின் திருமேனி புகைப்படத்தை பொதுவெளியில் வெளியிடுவதை ஏற்கமுடியாது என்றார். சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது ரங்கராஜன் ஏன் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் என்றும் இணை ஆணையர் கேள்வி எழுப்பினார்

    ஜேஷ்டாபிஷேகத்தை ஒட்டி நம்பெருமாளின் புகைப்படம் வெளியானதால், பக்தர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரங்கராஜன் கூறும் புகார் பற்றி கோவில் நிர்வாகம் முறையான விளக்கம் அளிக்குமா? அல்லது ரங்கராஜன் மீது பதிலுக்கு வழக்குகள் போடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: