Home /News /tamil-nadu /

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக படையெடுக்கும் தமிழர்கள்.. இலங்கை பொருளாதார நெருக்கடியால் அவலம்...

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக படையெடுக்கும் தமிழர்கள்.. இலங்கை பொருளாதார நெருக்கடியால் அவலம்...

இலங்கையில் இருந்து தமிழகம் வரும் தமிழர்கள்

இலங்கையில் இருந்து தமிழகம் வரும் தமிழர்கள்

Srilanka Economic Crisis: இலங்கை தமிழர்கள் 16 பேர் இதுவரை அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து தமிழகத்திற்கு மேலும் 10 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு பால், உணவு, பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக படையெடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் மன்னார் பகுதியில் இருந்து நேற்று கைக்குழந்தையுடன் 6 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி பகுதிக்கு வந்தனர். அவர்களை மீட்டு இந்திய கடலோர காவல்படை விசாரித்து வரும் நிலையில், வவுனியா பகுதியிலிருந்து மேலும் 10 பேர் தமிழகத்திற்கு அகதிகளாய் வந்துள்ளனர்.

    Also Read: பொருளாதார நெருக்கடி... அகதிகளாக தமிழகத்திற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்..

    மன்னார் கடற்கரையிலிருந்து திங்கட்கிழமை புறப்பட்டவர்களின் படகு எஞ்சினில் பழுது ஏற்பட்டதால், நடுக்கடலில் கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் தத்தளித்துள்ளனர்.பல மணி நேர முயற்சிக்கு பின் இஞ்சின் சரி செய்து செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.

    இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தகாலங்களில் உறவுகளையும் உடமைகளையும் இழந்து உயிர் பிழைத்தால் போதும் என 1990 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாய் வந்து போர் முடிந்த பின் 2012ல் மீண்டும் இலங்கைக்கு புறப்படுச் சென்றோம். தற்போது உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு பயந்து குழந்தைகளோடு மீண்டும் இரண்டாவது முறையாக அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளதாகவும், இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைய உள்ளதாகவும், எரிபொருள் தட்டுபாட்டால் வரமுடியாமல் அவதியுற்று வருவதாக தமிழத்திற்கு அகதிகளாக வந்துள்ள இலங்கை தமிழர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    தொடர்ந்து செவ்வாய்கிழமை காலை முதல் இரவு வரை 16 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். மேலும் சிலர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கடல் பாதுகாப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Economy, Food, Hiked price, Srilanka, Srilankan Refugees, Srilankan Tamil

    அடுத்த செய்தி